Wednesday, February 25, 2009

தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்! (4)

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.

"இல‌ங்கைப் பிரச்னைக்காக இங்குள்ள‌ த‌மிழ‌ர் ஒன்றாத‌ல் வேண்டும் என்று சொன்ன‌ உங்க‌ளைப் பாராட்டுகிறேன். எல்லோரையும் ஒன்றாக‌ச் சொல்லிவிட்டு நீங்க‌ளே பிரிந்த‌து ஏன்?

இன்னும் உங்க‌ளுக்கு ஒரு ஓர‌த்தில் ம‌ன‌சாட்சி என்று ஒன்று சிறித‌ள‌வேணும் இருந்தால் நிதான‌மாக‌ச் சிந்தித்துப்பாருங்க‌ள்.

ஏற்க‌ன‌வே இல‌ங்கைத் த‌மிழ‌ர் பாதுகாப்பு இய‌க்க‌ம் என்று ஒன்றைத் துவ‌ங்கியிருக்கிறார்க‌ள். அதை ஏன் துவ‌ங்கினார்க‌ள்? ஈழ‌த் த‌மிழ‌ர்க்காக‌ உங்க‌ள் த‌லைமையில் போராடுகிறோம், வாருங்க‌ள் என்று வ‌ருந்தி வ‌ருந்தி அழைத்தார்க‌ள். உட‌னே என்னை முன்னிறுத்திப் போராட‌ச் சொல்லி என் ஆட்சியைக் க‌விழ்க்க‌ப்பார்க்கிறார்க‌ள் என்றீர்க‌ள். ச‌ரி இவ‌ரை ந‌ம்பினால் ஈழ‌த் த‌மிழ‌னுக்கு விமோச‌ன‌ம் கிடைக்காது என்று ந‌ம்பித்தான் இல‌ங்கைத் த‌மிழ‌ர் பாதுகாப்பு இய‌க்க‌ம் என்று ஒன்றைத் துவ‌க்கினார்க‌ள்.

அதிலும் குறிப்பாக‌ ஏன் அப்ப‌டித் துவ‌க்கினார்க‌ள். இதில் ப‌ல்வேறு க‌ட்சிக‌ள் இருந்தாலும் த‌மிழ‌ர் என்ற‌ ஒரு குடையின் கீழ் திர‌ள‌ வேண்டும் என்பதுதான் அதன் முத‌ன்மையான‌ நோக்க‌ம். அப்ப‌டியே துவ‌க்கினாலும் போராட்ட‌த்துக்கு உங்க‌ளை விட்டுவிடாம‌ல் உங்க‌ளுக்கும் முறையான‌ அழைப்பை இல‌ங்கைத் த‌மிழ‌ர் பாதுகாப்பு இய‌க்க‌த்தின் சார்பில் அனுப்பினார்க‌ள். ஆனால் நீங்க‌ளோ என்னை அழைக்க‌வில்லை என்று முழுப்பொய் சொன்னீர்க‌ள். ப‌ழ‌.நெடுமாற‌ன் உங்க‌ளுக்கு அனுப்பிய‌ அழைப்பைச் செய்தியாள‌ர்க‌ள் முன்னிலையில் வாசித்துக்காட்டி உங்க‌ள் பொய்யை வெளிச்ச‌ம் போட்டுக்காட்டினார்!

உட‌னே ம‌ருத்துவ‌ம‌னையிலிருந்த உங்க‌ளுக்கு இல‌ங்கை த‌மிழ‌ர் ந‌ல‌ உரிமைப் பாதுகாப்புப் பேர‌வை என்ற‌ ஒன் றைத் துவ‌க்கிய‌தாக‌ அறிவித்தீர்க‌ள். இத‌ன் மூல‌ம் இங்குள்ள‌ த‌மிழ‌ர் ஒன்றாத‌ல் வேண்டும் என்ற உங்க‌ள் வாய்மொழியையே பொய்மொழியாக்கிவிட்டீர்க‌ள். அழைத்த‌வ‌ர்க‌ளை விட்டுவிட்டு அதிமுக‌வுக்கு அழைப்பு விடுகிறீர்க‌ள். என்ன‌ அய்யா, இது நியாய‌ம்? இதுவெல்லாம் உங்க‌ளின் கைவ‌ந்த‌ க‌லை என்ப‌து என‌க்கு ந‌ன்கு தெரியும்.

ம‌ருத்துவ‌ம‌னையிலிருந்துகொண்டே குடும்ப‌ ந‌ல‌னை ம‌ட்டுமே முன்னிறுத்தி ஆட்சியாள‌ர்க‌ளுக்கு உத்திர‌வு பிற‌ப்பிக்கும் உங்க‌ளின் குடும்ப‌ப் பாச‌த்திற்கு ஒரு எடுத்துக்காட்டுதான், "அர‌சு கேபிள் நிறுவ‌ன‌" அதிகாரியான‌ உமாச‌ங்க‌ரை ப‌ந்தாடும் உத்திர‌வு! பிழைக்க‌த் தெரியாத‌ ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாச‌ங்க‌ர் ஜெய‌ல‌லிதா ஆட்சியில் சுடுகாட்டுக் கூரை ஊழ‌லை வெளிக்கொண‌ர்ந்தார்!

உங்க‌ளாட்சியில் சும‌ங்க‌லி வட இணைப்பு நிறுவனத்தின் கருங்காலித்தனத்தை வெளிக்கொணர்‌ந்தார்! ஆட்டைக் க‌டிச்சு மாட்டைக்க‌டிச்சு என் குடும்ப‌த்தையே க‌டிக்க‌ வ‌ந்தாயா? என்று ஒரு நேர்மையான முதுகெலும்புள்ள ஒரு அதிகாரியை தூக்கி வீசி எறிந்திருக்கிறீர்க‌ள். இதையெல்லாம் ம‌க்க‌ள் உன்னிப்பாக‌ க‌வ‌னித்துக்கொண்டிருக்கிறார்க‌ள், முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே! இத‌ற்கெல்லாம் ப‌தில் சொல்லும் கால‌ம் வெகு தொலைவில் இல்லை! ஈழத் தமிழரென்றாலும், அரசுக்கட்டிலானாலும் ஆஸ்பத்திரிக்கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தாலும் உங்கள் சிந்தனை உங்கள் குடும்பத்தைச் சுற்றியே என்பது எனக்குத் தெரியாதா? தமிழகத்து மூலை முடுக்கெல்லாம் இருக்கும் மக்களுக்குத்தான் தெரியாதா?

இல‌ங்கை த‌மிழ‌ர் ந‌ல‌ உரிமைப் பாதுகாப்புப் பேர‌வை அமைத்துள்ள‌ உங்க‌ளுக்கு இன்னொன்றைச் சுட்ட‌ க‌ட‌மைப்ப‌ட்டிருக்கிறேன். ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளுக்கு உங்க‌ளால் விடிவு ஏற்ப‌ட‌ப்போவ‌தில்லை என்ப‌து வெட்டவெளிச்ச‌மாகிவிட்ட‌து. ஏனென்றால் அன்ப‌ழ‌க‌னார் இல‌ங்கைப் பிர‌ச்னையில் எங்க‌ளால் எதுவும் செய்ய‌ இய‌லாது; தில்லியால் தான் இல‌ங்கையைக் க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியும்; நாம் அவ‌ர்க‌ளுக்கு உண‌ர்த்த‌ ம‌ட்டும்தான் முடியும் என்று உங்க‌ள் ஒட்டுமொத்த‌ கையாலாக‌த் த‌ன‌த்தை பேர‌வைக் கூட்ட‌த்திலேயே சொல்லிவிட்ட‌ பிற‌கு பேர‌வையின் இல‌ட்ச‌ண‌த்தையும் அத‌ன் நோக்க‌த்தையும் புரிந்து கொண்டேன்.

இலங்கைப் பிரச்னையில் நாடகமாடுவது யார்? என்று நீங்கள் ஜெயலலிதாவை நோக்கி விரல் நீட்டியிருக்கிறீர்கள்? உங்கள் நெஞ்சைத் தொட்டுக் கேட்டுக்கொண்டு ஜெயலலிதாவின் முதுகைப் பாருங்கள்.

இலங்கைத் தமிழர்களின் இன்னுயிர்காக்க தங்கள் இன்னுயிரை ஈகி வருவோர் மொழிப்போராட்டத்தை விட வலுவாக தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடந்துவருகிறது.

இந்திய‌ அர‌சு திட்ட‌வ‌ட்ட‌மாக‌ இப்போது கைவிரித்துவிட்ட‌து? இனி என்ன‌ செய்ய‌ப்போகிறீர்க‌ள்?

இல‌ங்கைய‌ர‌சு போரை நிறுத்தும் பேச்சே இல்லை என்று கொக்க‌ரிக்கிற‌து

இன்னும் காங்கிர‌சை ந‌ம்பி நாட‌க‌மாட‌முடியாத‌ இக்க‌ட்டான‌ சூழ்நிலைக்கு உங்களைத் தள்ளிவிட்டுவிட்டது.

அர‌சிய‌ல் கோமாளி சு.சாமியின் மீது முட்டைய‌டித்த‌தை காவ‌ற் துறையை ஏவிவிட்டு நீதியின் ப‌டிக்க‌ட்டுக‌ளை உடைத்தெறிந்து ஈழ‌த்த‌மிழ‌ருக்காக‌ போராடும் சூழ‌லை திசை திருப்பும் வ‌கையில் குள்ள‌ந‌ரி வேலைசெய்திருக்கும் த‌ங்க‌ளின் ஈன‌ச் செய‌லுக்கு ம‌ன்னிப்பே கிடையாது! காங்கிர‌சு க‌ட்சியில் ஈழ‌த்துக்காக‌ இன்னுயிர் ஈகினார் ஒருவ‌ர் என்றால் திமுக‌விலும் அத்தகைய‌ உண‌ர்வோடுதான் தொண்ட‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள் என்ப‌த‌ற்கு ஒரு சாட்சிதான் உங்க‌ளால் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ போட்டி ம‌னித‌ச் ச‌ங்கிலியில் உயிர் துற‌ந்த‌ தரமணி திமுக‌ சிவப்பிரகாசம்! இன்னும் நாட‌க‌மாடும் இழி செய‌லை நிறுத்த‌வில்லையென்றால் த‌மிழின‌ம் ம‌ன்னிக்க‌வே ம‌ன்னிக்காது, முதல்வர் அவர்களே!!

காலம்தாழ்ந்தாலும், நீங்கள் இந்த நெருக்கடியான நேரத்திலாவது ஒரு நல்ல முடிவை எடுப்பதற்கு இது மிகச் சரியான நேரம், முதல்வர் அவர்களே!

ச‌ரி வித‌ய‌த்துக்கு வ‌ருகிறேன். ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் என்றால்தான் தில்லியைக் கைகாட்டுகிறீர்க‌ள்; ஈழத்திலிருந்து உங்க‌ளையே ந‌ம்பி வ‌ந்த‌ இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளை அக‌திக‌ள் முகாமில் நீங்க‌ள் எப்ப‌டி வைத்திருக்கிறீர்க‌ள்?

தமிழகத்தை நம்பி வந்த ஈழத் தமிழர்கள் தமிழகத்தில் நடத்தப்படும் நிலை மிகக்கொடுமையானதாக இருக்கிறது. அகதிகளாய் இங்குவந்து, ஏன் வந்தோம் என்ற ஆறாத் துயரில் ஆழ்ந்திருப்போர் குறித்து ஏன் தெரிந்து கொள்ள வில்லை?

தமிழக அரசும் சரி, மத்திய அரசும் சரி ஈழத் தமிழர்களை மனித நேயத்தோடு அணுக மறுக்கிறது? ஏன்? குற்றுயிரும் குலையுயிருமாய் இங்கு வந்து, அந்தக் குண்டுகளுக்கே இரையாகியிருக்கலாமோ என்று எண்ணுகிற சூழலை உங்கள் அரசும், மத்திய அரசும் ஏற்படுத்தியுள்ளது வேதனை தரும் ஒன்று; நெஞ்சுள்ளோர் பதறிப்போவார். ஈழத் தமிழருக்கு இராசபக்சே எமன் என்றால் இங்கிருப்போருக்கு நீங்கள் சார்ந்த அரசும்,நடுவணரசும் கொடுந்தீங்கிழைக்கிறது.

இந்திய அரசு அகதிகளைக்கூட‌ ஒரே மாதிரி நடத்த முன்வராமல் ஈழ அகதிக்கு ஒரு நீதியும், திபெத்திய அகதிக்கு ஒரு நீதியும் செய்யும் கொடுமையும் நீங்கள் அறிந்தே நடக்கிறதா? தெரிந்தும் தெரியாததுபோல இதிலும் நடுவணரசுக்கு துணைபோகிறீர்களா?

திபெத்திய அகதி முகாம் எப்படி இயங்குகிறது? ஈழத் தமிழர் அகதிகள் முகாம் எப்படி இயங்குகிறது? அவர்களுக்கு என்னவெல்லாம் இந்திய அரசு சலுகைகளைச் செய்கிறது? திபெத்திய முகாம் உள்ள கர்நாடகாவில் கர்நாடக அரசு செய்யும் உதவிகள் என்ன? ஈழத் தமிழர் முகாம்கள் உள்ள தமிழகத்தில் தமிழக அரசு செய்யும் உதவிகள் என்ன? இத்தனைக்கும் கர்நாடகத்திற்கும் திபெத்தியருக்கும் எந்த ஒட்டுறவும் கூட்டுறவும் கிடையாது. ஆனால் தமிழகத்தில் இரத்த சம்பந்தம் உள்ளவர்கள், தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்ற பந்தம் உள்ளவர்கள் ஈழத் தமிழருக்காக ஈழத் தமிழர் நல உரிமைப்பேரவை வடிப்பது கண்ணீரா? நீலிக்கண்ணீரா? என்பதை இந்த மடலின் முடிவில் தெரிந்துகொள்வீர்கள்!

இந்தியாவில் திபெத்திய அகதிகள் மற்றும் ஈழத்தமிழ் அகதிகள் பலர் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களுக்கு இந்திய அரசு செய்யும் உதவி(?)களை இங்கு பட்டியலிடுகிறேன். ஒட்டும் உறவும் இல்லாத கர்நாடக அரசு செய்து தந்திருக்கும் ஏற்பாடுகளையும் ஓய்வாக மருத்துவமனையின் மலர்படுக்கையிலிருந்தவாறே வசதியாகச் சாய்ந்து கொண்டு படித்துப்பாருங்கள்.

கர்நாடகாவிலுள்ள திபெத்திய அகதிகள் முகாமில் 5,232 அகதிகள் உள்ளனர்.

தாங்கள் விரும்பியது போல் வீடுகளைக் கட்டிக் கொள்ளுவதற்கு அனுமதி (அனைத்தும் மாடி வீடுகள் மற்றும் அவர்களின் கலாச்சாரப்படி கட்டப்பட்ட ஓட்டு வீடுகள்). தனியாக ஒவ்வொரு பகுதிக்கும் திபெத்தியர்களுக்கு 5 மருத்துவர்கள், 15 செவிலியர்களுடன் தரமான, நவீன வசதிகளுடன் தனி மருத்துவமனை; அவர்கள் தாங்களே வடிவமைத்துக் கொண்ட கழிப்பறை, குளியலறைகள். ஆனால் திபெத்திய அகதிகளுக்கோ தங்கள் புத்தமத கலாச்சாரத்தின்படி தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளவும், உடைகள் அணியவும், வீடுகளைக் கட்டிக் கொள்ளவும், தங்கள் மொழியை பாதுகாத்துக் கொள்ளவும், அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கின்றது. தனியாக நவீனமுறையில் வடிவமைக்கப்பட்ட புத்த கோயில் மற்றும் தலாய்லாமா கோயில்கள் 1 ஏக்கர் பரப்பளவில் கட்டித்தரப்பட்டுள்ளது.

தனியாக சுமார் ஐம்பது மாணவர் படிக்கக்கூடிய மதப்பள்ளி ஒன்றும்,அதே போல் மதக் கல்லூரி ஒன்றும்,தனித்தனியான மாணவர் விடுதிகள் உள்பட ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

சகல வசதிகளுடன் CBSC பாடத் திட்டத்தில் - தில்லி அரசாங்கத்தின் அனுமதி பெற்ற. திபெத்திய அகதிக் குழந்தைகளுக்கு மட்டுமான பள்ளி கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இது பத்தாம் வகுப்பு வரை மட்டும். பின் 11, 12 வகுப்பு பயில‌ அரசே அனைத்து செலவுகளையும் ஏற்று சிம்லா அனுப்பி வைக்கிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் படிக்க அரசு செலவுடன் முறையே 3, 5 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. திபெத்தியர்கள் தங்கள் உயர்கல்வியை தொடர அகதிகள் என்ற முத்திரையுடன், கர்நாடகத்தில் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம். மொத்தமாக இருக்கக்கூடிய மக்கள் தொகையில் 5232 பேர்களுக்கு பண்படுத்தப்பட்ட, நீர் வசதியுடன் விவசாயம் செய்யத்தக்க 3,500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தனியாக இணையவசதி இலவசமாக வழங்கப் படுகிறது. 22 பகுதிகளுக்கும் தனித்தனியாக செல்போன் டவர்கள் உள்ள தொலைபேசி வசதிகள். நான்கு வகையான வங்கிகள் சிண்டிகேட் வங்கி,ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர்,கூட்டுறவு வங்கி,வெளிநாட்டு பணம் பெற்றுக் கொள்ள Western Union Money Transfer வசதிகள், தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள்; சுயமாக பால்பண்ணை வைக்க, பொருட்கள் உற்பத்தி பண்ணை, கடை வைத்துக் கொள்ள அரசே வட்டி மற்றும் நிபந்தனை இல்லாமல் கடன் வழங்குகிறது.

அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை வெளியில் சென்று விற்கவும், கடையில் சென்று விற்கவும் அனுமதிக்கப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாக (பணிமனை) ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பண உதவி மற்றும் பொருளுதவி குடும்பத்திற்கு மாதம் 5000 ரூபாய்க்கும் மேல் வழங்கப்படுகிறது.

திபெத்திய அகதிகளுக்கு தனி அலுவலகம் அமைக்கப்பட்டு அதற்காக அமைக்கப்பட்ட அதிகாரி மாதமொருமுறை மைய அரசுக்கு அறிக்கை அனுப்புகிறார். மற்றபடி முழு சுதந்திரமாக உள்ளனர். திபெத்திய அகதிகளுக்கு உள்ள மற்ற சிறப்பியல்புகள் இளைஞர்களுக்கு தனியாக அமைக்கப்பட்ட Youth Congress மக்கள் ஒன்றாக கூடுவதற்கு Multipurpose Hall. அவர்கள் நாட்டில் இருந்து வருபவர்களை தங்கவைக்க அரசு ஓய்வு விடுதி அவர்கள் விரும்பும் இடத்தில் மதவழிபாட்டுத் தலங்கள். வெளியில் சென்று தொழில் தொடங்க வசதி.

கர்நாடக மக்களுடன் இயல்பாக கலந்து கொள்ள அனுமதி. (ஆனால் ஈழ அகதிகள் அனுமதிக்கப்படுவதில்லை) ஆகியவை ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

திபெத்திய அகதிகள்முகாம் படங்களை உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன். இதை படித்துவிட்டு படங்களைப் பார்த்துவிட்டு ஈழத்தமிழர்கள் அகதிகளாய் உங்கள் தலைமையில் இயங்கும் அரசு எப்படி வைத்திருக்கிறது என்று நீங்கள் பார்த்துப் புளகாங்கிதம் அடையப் போகிறீர்களா? வெட்கித் தலைகுனியப்போகிறீர்களா?

திபெத்திய அகதிகள் முகாம் படங்கள்


103 முகாம்களில் ஏழத்தாழ 75,000க்கும் மேலஈழத் தமிழர்கள் அகதிகளாக‌ உள்ளனர். தினமும் தங்கள் உடைமைகளை இழந்து உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு நூற்றுக்கணக்கான பேர் வந்து கொண்டும் இருக்கின்றனர்.

அரசாங்கங்கள் கட்டிக் கொடுக்கும் குடிசைகள் மற்றும் ஈழ அகதிகள் தாங்களாக கட்டிக் கொள்ளும் குடிசைகள். 90% வீடுகளில் மின்சாரமே இல்லை. பெரும்பாலும் மேற்கூரை சரியாக இல்லாத வீடுகள் அதிகமாக உள்ளன.

அருகில் உள்ள பொது மருத்துவமனைகளில் உடல் நலம் பாதிக்கப்படும் பொழுது, முகாம் பாதுகாவலர் அனுமதி பெற்றுப் போய் பார்த்துக் கொள்ளலாம்.

பாதி முகாம்களில் கழிப்பிட வசதி இல்லை. ஒரு சில முகாம்களில் இடிந்து போய் பராமரிப்பு அற்று நாய்களும், பன்றிகளும் (மனிதன் போக தகுதியற்ற) மலம் கழிக்கக்கூடிய கழிப்பறை, எதற்கும் மேற்கூரை கிடையாது. திறந்த வெளி கழிப்பிடம்.

பெண்கள் குளிப்பதற்கு நான்கு பக்கமும் ஓலைகளால் வேயப்பட்ட வானமே கூரையாய் குளியலறை.

அனைத்து உரிமைகளும் ஈழத்தமிழர்களுக்கு மறுக்கப்படுகிறது. பொதுவாக ஈழத்தில் உள்ள பெண்கள் குட்டைப் பாவாடை அணிவது வழக்கம்தானே. அதனை இங்குள்ள காவல் துறையினர் மற்றும் ஊழியர்கள் நீங்கள் ஆபாசத்தை தூண்டுகின்றீர்கள் என்ற பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்கின்ற அவலங்களும் அரங்கேறுவது சாதாரணமானது.

மனித உரிமையே இல்லாத இடத்தில் மத சுதந்திரம் எதிர்பார்ப்பது அவர்கள் அறியாமை இல்லையா, முதல்வர் அவர்களே!?

அந்தந்த பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஈழக் குழந்தைகள் 1 முதல் +2 வகுப்பு வரை சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். (ஆனால் மண்டபம் பள்ளியில் நேரடியாக +1 மற்றும் +2 வகுப்புகளில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவது இல்லை. அதற்கு பள்ளி நிர்வாகம் சொல்லும் காரணம் என்னவெனில் +2 வகுப்பு தேர்வு முடிவுகள் பாதிக்கப்படும் என அச்சம் கொள்வதாகச் சொல்கிறது. (மண்டபம் பள்ளியின் தற்போதைய நிலை என்னவெனில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 129 மேல்நிலைப் பள்ளிகளில் தர நிலையில் 128வது இடத்தில் உள்ள பெருமையான விதயத்தையும் தங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.

ஒருசில ஈழ முகாம்களில் 1 முதல் 5 வரையான வகுப்புகள் உள்ள பள்ளிகள் உள்ளன. அங்கு ஆசிரியர்களாக அகதிகளால் நியமிக்கப்பட்ட அகதிகள் முகாம்களில் உள்ள படித்த அதிகபட்சமாக இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர்.

பள்ளிக் கட்டிடம் பெரும்பாலும் பாழடைந்து ஓட்டை உடைசலாகத் தான் உள்ளது. உயர்கல்வியில் 2003 வரை இருந்த இட ஒதுக்கீடு நீக்கப்பட்டதால். உயர்கல்வி முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது வசதி உள்ளவர்கள் தனியார் கல்லூரிகளில் படிக்க அனுமதியை தாராளமாக வழங்கியிருக்கிறீர்கள். நம் நாட்டின் தனியார் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் எவ்வளவு என்று உங்களுக்கே தெரியும் முதல்வர் அவர்களே! ஈழத் தமிழர்கள் உயர் படிப்பு படித்து என்ன செய்யப்போகிறார்கள்? என்கிறீர்களா முதல்வர் அவர்களே!

குடியிருக்கவே ஏனோதானோவென்று இடம் கொடுத்த உங்கள் ஆட்சியில் கர்நாடக மாநிலம்போல‌ விவசாய நிலம் கேட்பது சரியில்லை, இல்லீங்களா முதல்வர் அவர்களே!?

நாட்டுப் பிரச்சனைகள் பேசினாலே தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறப்பு முகாம்களுக்கு அனுப்பப்படும் சூழ்நிலையில் மற்ற முகாம்களில் இருக்கும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ள STD Booth-களையும், 1 ரூபாய் நாணயப் பெட்டியையும் பயன்படுத்துகின்றனர். அனால் அதையும்கூட‌ முகாம் காப்பாளரின் அனுமதி வேண்டும், என்ற அதிபயங்கர நிபந்தனையல்லவா விதித்திருக்கிறீர்கள்,முதல்வர் அவர்களே!

மண்டபம் முகாமில் மூன்று நாள் மட்டும் வெளியே சென்று கூலி வேலை பார்க்க அனுமதி அளித்திருக்கிறீர்கள் முதல்வர் அவர்களே, இதற்கே உங்களுக்க் நன்றி சொல்ல வேண்டும், முதல்வர் அவர்களே.

ஏனென்றால் மற்ற முகாம்களில் அருகிலுள்ள ஊர்களில் சென்று வண்ணமடித்தல், கல்லுடைத்தல், விவசாயத்தில் கூலி வேலை செய்ய சாதாரணமாக அனுமதிப்பதில்லை.

கடுமையான நிபந்தனையுடன் வேலைதான் பார்க்கப்போறியா புலிகளுக்கு ஏதேனும் மறைமுக தொடர்பு வைத்துக்கொண்டு போகிறாயா? என்ற நடுவணரசுக்கு விசுவாசமான கேள்விகணைகளுக்கப்பால் அல்லவா அனுப்பிவைக்கப்படுகிறார்கள்.

குடும்பத் தலைவருக்கு ரூ. 72, பெண்ணுக்கு ரூ.50 மற்ற உறுப்பினருக்கு ரூ.45 சிறு குழந்தைகளுக்கு ரூ.12.50. 15 நாளுக்கு ஒருமுறை வழங்கப்படுகின்றது. இந்தப் பணத்தை அகதிகள் வாங்குவதற்கும் உங்கள் அதிகாரிகள் கொடுப்பதற்கும், அடாடா அதுவும் மேன்மை தங்கிய தங்கள் ஆட்சியில் என்க்கே எழுதக் கூச்சமாக இருக்கிறது முதல்வர் அவர்களே!

ஈழத்தமிழர் அகதிகள் முகாம் படங்கள்

மண்டபம் முகாம்களில் அறிவிக்கப்படாத தினம்தோறும் ஆய்வும் மற்ற முகாம்களில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஆய்வும் என்று நடைபெறுகிறது. இந்த ஆய்வுக் கொடுமை இருக்கிறதே முதல்வர் அவர்களே அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்.

ஆய்வின் போது தங்கள் சொந்த மண்ணைப் பற்றிப் பேசினால் தீவிரவாதி என்ற முத்திரை குத்தப்பட்டு செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற கொடுமை இருக்கிறதே, சிங்கள இராணுவமாய் உங்கள் அதிகார வர்க்கம் அதட்டி,அடக்கி நடத்தும் போக்கு இருக்கிறதே, சிங்களரெல்லாம் எம்மாத்திரம்?

தன் நாட்டை விட்டு இங்கு வரும் அகதிகளிடம் மூன்று நாட்கள் மண்டபம் முகாமில் உள்ள தனி சிறையில் அடைக்கப்பட்டு அவர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றுக் கொள்கிறார்களா என்ற சந்தேகத்துடன் அவ்வாறு சோதனை செய்யும் போது சற்று வாட்டசாட்டமான இளைஞர்கள் கோபப்பட்டால் அவர்களை உடனேயே செங்கல்பட்டு சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கின்றனர்.

செங்கல்பட்டு சிறப்பு முகாம் என்பது அறிவிக்கப்படாத ஒரு சித்திரவதைச் சிறைக்கூடம். நடுவண‌ரசு ஒரு கண்ணில் சுண்ணாம்பையும், தங்கள் அரசு ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்து பார்ப்பதை எங்கு போய்ச் சொல்வது?

திபெத்திய அகதிகளைப் போல் ஈழத்தமிழர்களைப் பார்க்கவில்லையென்றாலும், குறைந்தபட்சம் அகதிகளாக வரும் ஈழத்தமிழர்களை மனிதர்களாகவாவது பாவித்து, வாழ்வுரிமையைப் பாதிக்காத அளவு வாழ்வதற்கான உத்தரவாதத்தினை தமிழினத் தலைவரான நீங்களே தராதபட்சத்தில் இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற‌ தங்கள் பம்மாத்து பாவ்லாக்கள் எல்லாம் யாரை ஏமாற்ற? யாரைத் திருப்திப்படுத்த முதல்வர் அவர்களே!

இந்தியாவை/ தமிழகத்தைத் தவிர்த்து மற்ற நாடுகளுக்கு அகதிகளாகச் சென்ற ஈழத்தமிழர்களை மற்ற நாடுகள் தன் நாட்டு குடிமகன் போல் மதித்து தனது அரசு பொறுப்புகளிலும் அமர்த்தியுள்ளார்கள். ஆனால் உங்கள் அரசு ஈழத்தமிழர்களை மனிதர்களாகக்கூட நினைக்கமறுக்கிற சூழலை வைத்துக்கொண்டு இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்று பெத்தபேராக வைத்துக்கொண்டால் போதுமா?என்பதைக் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள் முதல்வர் அவர்களே!

அப்படிப்பட்ட‌ இந்திய அரசுக்கு நீங்களும் துணைபோய்க்கொண்டு நடுவணரசோடு சேர்ந்துகொண்டு ஈழத்தில் உள்ள தமிழர்களுக்கும் இங்கு அகதிகளாய் வந்துள்ள‌ தமிழர்கள் கண்களுக்கும் சுண்ணாம்பு தீட்டுகிறீர்களே, இது நியாயமா?

இராம‌தாசுக்கு ப‌தில் சொல்வ‌தாக‌ நினைத்துக்கொண்டு இர‌ண்டு முறை ஆட்சியைப் ப‌றிகொடுத்தேன் என்று தேய்ந்துபோன‌ இசைத்த‌ட்டாக‌ திரும்பத் திரும்ப‌ச் சொல்வ‌தை விடுங்க‌ள்; அப்போதும் கூட "இதேவேளை இலங்கை தமிழர் பிரச்னைகளுக்காக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் தாக்கப்படுவதை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் சொல்லி உங்க‌ளின் காங்கிர‌சு ப‌க்தியை எடுதிய‌ம்பியிருக்கிறீர்க‌ள். க‌டைசிகால‌த்தில் அர‌சு அஹ்டிகாரிக‌ளுக்கு துரோக‌ம், ஈழ‌த்த‌மிழ‌ர்களுக்குத் துரோக‌ம், ஈழ‌த்திலிருந்து த‌மிழ‌க‌த்துக்கு வ‌ந்த‌ ந‌ம் ச‌கோத‌ர‌த் த‌மிழ‌ர்க‌ளுக்கு துரோக‌ம் என்று நீங்க‌ள் ப‌ட்டிய‌லை நீட்டிக்கொண்டே போவ‌து உங்க‌ள் பாவ‌ மூட்டையின் சுமை அதிக‌ரித்துக்கொண்டே இருக்கிற‌து என்ப‌தை ம‌ட்டும் மீண்டும்மீண்டும் நினைவு ப‌டுத்துகிறேன் முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே!

"சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இறங்கா ரடீ - கிளியே
செம்மை மறந்தா ரடீ...."

பார‌திகூட‌ உங்க‌ளையே நினைத்து இதை பாடியிருப்பானோ என்று தோன்றுகிற‌து.

அடுத்த‌ ம‌ட‌லில் உங்க‌ளைச் ச‌ந்திக்கும்வ‌ரை!

அசாதாரணத் தமிழன்,

- ஆல்பர்ட் பெர்னாண்டோ,
விஸ்கான்சின், அமெரிக்கா.

ந‌ன்றி ப‌ட‌ங்க‌ள்:த‌மிழ்வின்

Monday, February 23, 2009

Shame on us Tamils..



நன்றி:வாசன்,அல்புகார்க்கி,நியூ மெக்சிகோ,அமெரிக்கா.

Sunday, February 1, 2009

தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்! (3)



மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.
ஒரு வழியாக பிரணாப் முகர்ஜி இருநாள் பயணமாக கொழும்பு போய்....திரும்பி வந்தும் விட்டார். உங்கள் வேண்டுகோள் இறுதியாக செவிமடுக்கப்பட்டுவிட்டது. பிரதமரைச் சந்தித்து, சட்டசபையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றி அதுவும் இறுதி வேண்டுகோளில் அய்யகோ என நீங்கள் கதறிய கதறல் கேட்டுப் பத‌றிப்போன பிரணாப் புறப்பட்டுவிட்டார் இலங்கைக்கு! இலங்கை செல்லும் முன்பாக உங்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடி தங்களிடம் உத்த்திரவு பெற்று கிளம்பியதாக சட்டப்பேரவையிலும் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தருணத்திற்காகத்தானே நீங்க‌ள் காத்திருந்தீர்க‌ள்!

நீங்கள், மருத்துவமனையில் இல்லாவிட்டால் இந்நேரம் உடன்பிறப்புகளுக்காகவாவது ஒரு மடல் எழுதியிருப்பீர்கள்? இறுதிவேண்டுகோள் டெல்லிக்கு எட்டும்படி நான் அய்யகோ என்று கதறி அழுததற்கு பலன் கிடைத்துவிட்டது. பிரணாப் இதோ புறப்பட்டுவிட்டார். போர் நிறுத்தம் நடக்கும் என்று நம்புவோம்; குறைந்தபட்சம் வெடிச்சத்தங்களையாவது நிறுத்திவிட்டால் நம் தமிழினம் காக்கப்படும்;நாளும் கொல்லப்படுவதிலிருந்து தப்பிவிடும்; நாம் பொறுமைகாத்ததற்கு பலன் கிடைத்துவிட்டது. இன்னும் கொஞ்சம் அவர் வருமட்டும் பொறுமை காப்போம்! நல்லதையே நினைப்போம்; நல்லதே நடக்கும் என்று ஒரு கடிதம் எழுதி உலகத் தமிழர்களுக்கெல்லாம் உங்கள் நிலையுணர்த்தியிருப்பீர்கள்! பாழாய்ப்போன முதுகுவலி போரூர் மருத்துவமனையில் கொண்டுபோய்விட்டுவிட்டது.

ந‌ட‌ந்த‌து என்ன‌?

பிரணாப் முகர்ஜி எதற்காக இலங்கை செல்கிறார்? என்பதை இந்திய அரசு வெளிப்படையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவே இல்லையே!

பிரணாப் இலங்கை செல்ல வேண்டும் என்பது நீண்ட நாளைய கோரிக்கை, தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்திய அரசு "போர் நிறுத்ததை" வலியுறுத்துவத‌ற்காக வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களை கொழும்புக்கு அனுப்புகிறது என்று செய்திகளே வெளியாகவில்லையே.

"தங்களின் அழைப்பின் பேரிலேயே இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு வந்துள்ளதாகவும்,புலிகளுடனான போரில் தாங்கள் பெற்ற வெற்றியைப் பகிர்ந்து கொள்ளவும், அடுத்து நடக்க வேண்டியவை குறித்து விவாதிக்கவுமே பிரணாப் முகர்ஜியை நாங்கள் இலங்கைக்கு அழைத்துள்ளோம் என்று அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார் என்று வெளிநாட்டு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில் மேலும்,"இலங்கைக்கு பிரணாப் முகர்ஜி வருவது இந்திய அரசின் முடிவல்ல. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே விடுத்த அழைப்பை ஏற்றுத்தான் பிரணாப் முகர்ஜி வந்துள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான நட்பு மற்றும் பாரம்பரியத்தைக் காக்கவும், முன்னேற்றத் திட்டங்கள் குறித்து உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சு நடத்தவுமுள்ளார்"என்று தெளிவாக இலங்கைப் பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாக வந்துவிட்டது.

"இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே சண்டை நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. இது பற்றி ராஜபக்சேவிடம் கவலை தெரிவித்தேன்"என்றும் நிலைமையை நேரில் பார்வையிட தமிழகத்திலிருந்து முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு இலங்கை வரலாம் என்று அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்" என்று திரும்பி வந்ததும் பேட்டியும் கொடுத்துவிட்டார் பிரணாப்.

ஆக‌, நீங்க‌ள் எம்.பிக்க‌ளை அனுப்பிச் சொன்ன‌து,ச‌ர்வ‌ க‌ட்சித்த‌லைவ‌ர்க‌ளோடு போய்ச் சொன்ன‌து,உண்ணாவிரதம், ம‌னித‌ச் ச‌ங்கிலி போராட்ட‌ம், ச‌ட்ட‌பேர‌வையில் தீர்மான‌ங்க‌ள் இப்ப‌டி எத்த‌னையோ வ‌ழி முறைக‌ளிலும் நீங்க‌ள் சொன்ன "போர் நிறுத்த‌ம்" என்ற‌ பிர‌தான‌ கோரிக்கையை கைக‌ழுவிவிட்ட‌து மத்திய அர‌சு!

கொழும்புக்கு செல்லும் முன்பாக‌ பிரணாப் முகர்ஜியை,"இலங்கை அதிபரிடம் பேசும்போது "போரை நிறுத்த"வும் இனப்பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண பேச்சுவார்த்தையை தொடங்கவும் வற்புறுத்துமாறு பிரணாப்பிடம் இந்திய கம்யூனிஸ்ட் க‌ட்சியின் சார்பில்

கேட்டுக்கொண்டார் ராஜா. அத‌ற்கும் "பெப்பே" காட்டிவிட்டு காங்கிர‌சு அர‌சு இர‌க‌சிய‌மாக‌ என்ன‌ செய்ய‌வேண்டுமோ அதை செய‌ல்ப‌டுத்திவிட்டு வ‌ந்துவிட்டார்,பிர‌ணாப்!

இத‌ற்கிடையில், உங்க‌ளை ந‌ம்பினால் ஒன்றும் ந‌ட‌க்காது என்று பா.ம.க. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க.,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழர் தேசிய இயக்கம் ஒன்று சேர்ந்து "இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்" ஒன்றைத் துவங்கிவிட்டனர்.

தொட‌ர்ந்து ம‌வுன‌ம் சாதித்தால் எங்கே நம்மை ஓர‌ம் க‌ட்டிவிடுவார்க‌ளோ என்று அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ பிப்.3ல் செய‌ற்குழுவைக் கூட்டியுள்ளீர்க‌ள். அதை வ‌ர‌வேற்கிறேன். வ‌ழ‌க்க‌ம்போல‌ கெடு எதுவும் விதிக்காமல் மத்திய அ‌ர‌சுக்கு நீங்க‌ள் அளிக்கும் ஆதர‌வை உடனடியாக வில‌க்கிக்கொண்டு த‌மிழின‌த்தைக் காக்க‌ நீங்க‌ள் முயற்சிக்காவிட்டால் உல‌க‌ த‌மிழ்ச் ச‌முதாய‌ம் உங்க‌ளை ஒருபோதும் ம‌ன்னிக்காது, முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே! ப‌ல‌நூறு ஆண்டுக‌ள் ஆனாலும் உங்க‌ள் மேல் விழுந்த‌ க‌றை நீங்க‌வே நீங்காது!

உலகத் தமிழினத் தலைவர் அவர்களே, நீங்கள் மருத்துவமனையில் இருப்பதால் இலங்கையில் நம்மினம் படும்பாட்டை எடுத்துச்சொல்வது என் கடமை என்பதால் சில விதயங்களைப் பட்டியலிடுகிறேன்.

சிவசங்கரமேனன் போய்வந்த சில நாட்களாகியும் போரை நிறுத்தக்காணோமே என்று பிரணாப் போரை நிறுத்த நேரில் ஒருநடை போய் சொல்லிவிடலாம் என்று போய்விட்டாரோ?! என்று தோன்றிய‌து. அவ‌ர் போயும் ஒன்றும் ஆக‌வில்லை!

அவ‌ர்க‌ள் தெளிவாக‌ இருக்கிறார்க‌ள், முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே! எல்லோருக்கும் க‌டுக்காய் கொடுத்துவிட்டு எதைச் செய்ய‌ வேண்டுமோ, அதை உங்க‌ளையும் கைக்குள் போட்டுக்கொண்டு சிங்க‌ள‌ அர‌சுக்கு ச‌ங்க‌நாத‌ம் பாடிக்கொண்டிருக்கிறார்க‌ள்!

சிங்கள அரசின் கொடூர இனப்படுகொலை சந்தித்திருக்கும் முல்லைத்தீவில் உள்ள மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பட்டினிச் சாவையும் எதிர்கொண்டுள்ளார்கள்.

சிங்கள அரசாங்கமே அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வல"யங்களிலிருந்து ஐ.நா மற்றும் உலக உணவுத் திட்ட அமைப்பின் பிரதிநிதிகள் வெளியேற சிங்கள அரசாங்கமே உத்தரவிட்டுள்ளது.

காரணம், பாதுகாப்பு வலயம் என்று சிங்கள அரசு அறிவித்த இடத்திலாவது ஒதுங்கியிருப்போம் என்றிருந்தவர்களை சாலையோரம், வேலியோரம்,

வீதிகளில், இடிந்த வீடுகளின் இடிபாடுகளில் உயிர் பிழைக்க உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்த‌ தமிழர்களை மொத்தமாகக் குண்டுபோட்டு 500க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்களோடு சிகிச்சைக்கு வலியில்லாமல் வேதனையோடு கட்டாந்தரையில் படுத்துப்புரள்கின்றனர். முதுகுவலியோடு நீங்கள் சொகுசு மருத்துவமனையிலிருந்தாலும் இதனைச் சொல்வது என் கடமையில்லையா, முதல்வர் அவர்களே!

சர்வதேச செஞ்சிலுவைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இலங்கையின் வடபகுதியில் தொடரும் மோதல்களில் 250 சதுர கிலோ மீட்ட‌ர் பரப்பளவான இடத்தில் இரண்டரை லட்சம் பேர் சிக்கியுள்ளதாகவும், அங்கு பெரும் மனிதாபிமான நெருக்கடி ஒன்று உருவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் அடைக்கலமாகியிருக்கும் தமிழர்களின் அன்றாட‌ வாழ்க்கை கேள்விக்குறியாகி பட்டினிச்சாவுக்கு முகம் கொடுக்கும் அவலத்தில் உள்ளது, என ஜெனீவாவில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் ஆசிய பிராந்திய நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக உள்ள ஜேக் மே டயோ தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்காவின் காங்கோ போல தென்னாசியாவிலும் அவலம் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக வன்னி தகவல்கள் அதிர்ந்து சொல்கிறது முதல்வர் அவர்களே! ஆனால் பிர‌ணாப் எதிலும் சேர்த்தியில்லாமல்,

"ஒன்றரை லட்சம் தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது பற்றி ராஜபக்சேவிடம் கவலை தெரிவித்தேன்" என்று புள்ளிவிப‌ர‌ம் கூட‌த்தெரியாம‌ல் உள‌றிக்கொட்டியிருப்பதிலிருந்து இவர் வெளிவிவகார அமைச்சரா? விவகார அமைச்சரா? இல்லை விவகாரம் தெரிந்து விவகாரம் செய்ய விரும்பாமல் காங்கிரசின் விருப்பத்தை மட்டுமே விருப்பாய்ச் செய்யும் அமைச்சரா? பதிலை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

இந்திய‌ அர‌சின் அணுகு முறைக்கும் உங்க‌ள் பொறுமைகாப்புக்கும் என்ன‌ ப‌ல‌ன் கிடைத்த‌தாக‌க் க‌ருதுகிறீர்க‌ள்? உங்க‌ளை இதைவிட‌க் கொடூர‌மாக‌ அவ‌மான‌ப்ப‌ட‌ வைக்க‌ வேறு யாராலும் முடியாது என்றே எண்ணுகிறேன்.

நீங்கள் ஓய்வாக மருத்துவமனையில் இருப்பதால் உங்கள் நினைவுகளை பின்னோக்கி அசைபோட்டுப்பார்க்க ஒருவாய்ப்பாகக் கருதி நீங்கள் இதுவரை பொறுமைகாத்தது நியாயம்தானா என்பதை எண்ணிப்பாருங்கள் முதல்வர் அவர்களே! அத‌ன் பிற‌காவ‌து செய‌ற்குழுவில் க‌ண்துடைப்புக்காக‌வோ, மூக்கு துடைப்புக்காக‌வோ ஒரு முடிவெடுக்காம‌ல் ஒரு முக்கிய‌ முடிவெடுப்பீர்க‌ள் என்ற‌ ந‌ம்பிக்கையோடு இந்த‌ ம‌ட‌லை அனுப்புகிறேன்,முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே!

* தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை 900 தடவைக்கு மேல் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, இலங்கையைக் கண்டித்து இந்தியா ஒரு வார்த்தையாவது கூறியதுண்டா?

*சிங்கள ராணுவம் நடத்தும் தாக்குதலில் தினமும் நூற்றுக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். பாதுகாப்பான பகுதி என்ற அறிவிக்கப்பட்ட இடத்தில் தங்கியிருந்த 500 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 4000க்கும் மேற்ப‌ட்டோர் காய‌ங்க‌ளுக்கு சிகிச்சை பெற‌ இய‌லாம‌ல் உள்ள‌ன‌ர்.

*அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறும் மத்திய அரசு, மறைமுகமாக இலங்கை அரசுக்கு ஆதரவளித்து இரட்டை வேடம் போடுகிறது என்ற உண்மையை இப்போதாவது உணர்கிறீர்களா?

**சீனா இலங்கையின் யுத்தத்துக்கு தேவையான இராணுவ பீர‌ங்கிக‌ளை வ‌ழ‌ங்குவ‌தாக‌ச் சொன்ன‌தும், சீனாவிட‌ம் ஏன், நாங்க‌ளே த‌ருகிறோம் என்றும் அத‌ற்கான‌ ஒப்ப‌ந்த‌த்தில் கையெழுத்துப்போட‌வுமே பிர‌ணாப் சென்ற‌தாக‌ த‌க‌வல்க‌ள் க‌சிந்திருக்கிற‌து. போர்த்த‌ள‌வாட‌ங்க‌ள், தேவையான‌ இந்திய இராணுவ‌ வீர‌ர்க‌ளை அனுப்பிவைக்க‌வும் இந்த‌ ஒப்ப‌ந்த‌ம் வ‌ழி செய்ய‌ப்போவ‌தாக‌ பிர‌ணாப் ப‌ய‌ண‌ இர‌க‌சிய‌ங்க‌ள் மெல்ல‌ எட்டிப்பார்க்க‌த் துவ‌ங்கியிருக்கிற‌து.

**பிர‌பாகார‌ன் முல்லைத்தீவிலிருந்து க‌டல் வ‌ழி த‌ப்பிவிடாம‌லிருக்க‌ இராடார் பொருத்த‌ப்ப‌ட்ட‌ க‌ப்ப‌லையும், கொச்சி துறைமுக‌த்திலிருந்து அதிர‌டிப்ப‌டை வீர‌ர்க‌ளை அனுப்பிவைக்க‌வும் பிர‌ணாப் இராச‌ப‌க்சேவுக்கு உறுதிகொடுத்து வ‌ந்துள்ள‌ செய்தி தெரியுமா உங்க‌ளுக்கு? பாவ‌ம் உங்க‌ளுக்குத்தான் எதுவும் சொல்லாம‌லே செய்துகொள்வ‌துதானே காங்கிர‌சு அர‌சின் வ‌ழ‌க்க‌மான‌ ப‌ழ‌க்க‌ம்!

*திருகோண‌ம‌லையில் அமெரிக்காவால் அமைக்க‌ப்ப‌டும் ஏவுக‌ணைத்த‌ள‌ம் இந்தியாவுக்கான‌ அச்சுறுத்த‌லாக‌க் க‌ருதுவ‌தாகத் தெரிவிக்க‌வும், இதுதொட‌ர்பான‌ இந்தியாவின் க‌வ‌லையை வெளிப்ப‌டுத்த‌வுமே த‌ம் ப‌ய‌ண‌ம் என்று ம‌கிந்த‌ இராச‌ப‌க்சேவிட‌ம் பிரணாப் தெரிவித்த‌ த‌க‌வ‌லும் கூட‌ உங்க‌ளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை, இல்லையா முதல்வர் அவர்களே! அப்ப‌டியே தெரிந்தாலும் திருகோண‌ம‌லையில் மின்நிலைய‌ம் அமைக்க‌ அனைத்து உத‌விக‌ளையும் செய்வ‌தாக‌த் தெரிவித்தேன் என்பார்!

*போரினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு உத‌விட‌ நிதி தேவை என்ற ம‌கிந்த‌ இராச‌ப‌க்சேவின் கோரிக்கையை இந்தியா ஏற்று ப‌ல‌ இல‌ட்ச‌ம் அமெரிக்க‌ டால‌ர்க‌ளை வ‌ழ‌ங்குவ‌த‌ற்கான ஒப்புத‌லையும் பிர‌ணாப் தெரிவித்துவிட்டார். ம‌கிந்தா ம‌கிழ்வான‌ந்தாவாகிவிட்டார். கார‌ண‌ம் அந்த‌ நிதியை அப்ப‌டியே பாகிஸ்தானிட‌ம் கொடுத்து ஆயுத‌க் கொள்முத‌ல் செய்ய‌ முடியும‌ல்ல‌வா?

*இவ்வ‌ள‌வுக்கும் பிற‌கு முத்தாய்ப்பாக‌,"த‌மிழ்நாட்டில் போடும் கூச்ச‌லைக் கேட்டு இங்கு வ‌ர‌வில்லை; அதிப‌ரின் த‌னிப்ப‌ட்ட‌ அழைப்பின் பேரிலேயே வ‌ந்தேன் என்று பிர‌ணாப் சிரித்து வ‌ழிய‌ச் சொல்லிய‌ சேதியை அங்குள்ள‌ பாதுகாப்புச் செய‌ல‌க‌ அதிகாரி சொல்லிச் சிரித்த சோக‌த்தையும் உங்க‌ள் காதில் போட்டுவிட்டேன், முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே!

*நீங்க‌ள் முன்பு"காங்கிரஸ் அரசு திமுகவுடன் தோழமை கொண்டுள்ள கூட்டணியிலே உள்ள ஒரு கட்சியின் அரசு. எனவே, கூட்டணி தர்மத்தைப் பின்பற்ற வேண்டுமென்று திமுக நினைப்பது தவறல்லவே?'' என்று குறிப்பிட்டிருந்தீர்கள். கூட்ட‌ணியாவ‌து த‌ர்மமாவ‌து என்று காங்கிர‌ஸ் க‌ட்சி இப்போது உண‌ர்த்திவிட்ட‌து இல்லையா முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே!

இந்த‌ நிலைப்பாடை நீங்க‌ள் பிப்.3லும் எடுத்தால், இம்முறை நீங்க‌ள் த‌னிமைப்ப‌டுத்த‌ப்படுவீர்க‌ள். உங்க‌ளோடு எந்த‌க் க‌ட்சியும் தேர்த‌ல்கால‌ உற‌வுக்குக்கூட‌ வ‌ர‌ம‌ட்டார்கள் என்பது சர்வ நிச்சயம் முதல்வர் அவர்களே!

*உல‌க‌த் த‌மிழின‌த் த‌லைவ‌ர், ஏழ‌ரைக்கோடி த‌மிழ‌ர்க‌ளின் முத‌ல்வ‌ர் எத்த‌னையோ வ‌ழிமுறைக‌ளைக் கையாண்டு பிர‌த‌ம‌ருக்கும், அன்னை சோனியாவுக்கும், வெளியுற‌வு அமைச்ச‌ருக்கும் எடுத்துச் சொல்லியும் இல‌ங்கையில் ந‌ட‌க்கும்....ந‌ட‌ந்துகொண்டிருக்கும் ஒரு வ‌ன்முறையைத் த‌டுத்து நிறுத்த‌ முடிய‌வில்லையென்றால் எங்கோ த‌வ‌று ந‌ட‌க்கிற‌து? எங்கோ திட்ட‌மிட்ட‌ ச‌தி ந‌ட‌க்கிறது, என்பது இன்னுமா உங்களுக்குப் புரியவிலை?!

*பிர‌த‌ம‌ருக்கும், இந்திய‌ அர‌சுக்கும் தாமதமின்றி உணர்த்த‌வேண்டிய‌ நிலையில் இருப்பது யார்? அது தாங்க‌ள‌ல்ல‌வா? அதுவும் உங்க‌ள் இறுதி வேண்டுகோளைப் புற‌க்க‌ணித்த பிற‌கும் நீங்க‌ள் பொறுமை காக்க‌வோ, கெடு விதிக்க‌வோ தேவையில்லை;உங்க‌ளை உதாசீன‌ப்ப‌டுத்திய‌வ‌ர்க‌ளுக்கு த‌க்க‌ பாட‌ம் புக‌ட்ட‌வேண்டிய மிக முக்கியமான த‌ருண‌மிது முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே!

*"தமிழ்நாட்டையே ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டத்தை நடத்த வேண்டும் என்பதையும்- காங்கிரஸ் ஆட்சிக்கு இனி இங்கே இடமே இல்லை, எங்களோடு இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று இறுதியான ஆனால் உறுதியான முடிவெடுக்க வேண்டுமா? வேண்டாமா?

*அறிஞர் அண்ணா வளர்த்து எம்மிடம் அளித்து விட்டுப் போன இந்த இயக்கத்தை ஆம், ஒரு கோடி உறுப்பினர் கொண்ட இந்த இயக்கத்தை பலியிட முனைவோருக்குத் துணை போக நான் தயாராக இல்லை" என்று எந்த‌ காங்கிர‌சை ந‌ம்பிச் சொன்னீர்க‌ளோ அவ‌ர்க‌ள் உங்க‌ளை ந‌ம்பிக் க‌ழுத்த‌றுத்துவிட்ட‌ நிலையில் நீங்க‌ள் இறுதியான‌ ஆயுத‌த்தை எடுக்க‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் வாய்த்துவிட்ட‌து முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே!

*முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே! உங்கள் கோரிக்கையைக் கிடப்பில் போட்டுவிட்டு "மொட்டைத்த‌லைக்கும் முழ‌ங்காலுக்கும் முடிச்சுப்போட காங்கிரசு முனைந்துவிட்டபோது?" உங்க‌ள் பின்னால் நாங்க‌ள் அணிவ‌குக்கிறோம் இல‌ங்கைப் பிர‌ச்னைக்காக‌ என்று ஒரு சில தலைவர்கள் சொன்ன‌தை ஏன் நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது?

*உங்க‌ள் த‌லைமையில் ந‌ட‌த்திய‌ ப‌ல்வேறு போராட்ட‌ங்க‌ள், நேர‌டி ச‌ந்திப்பு, ராஜினாமா அறிவிப்புக‌ளெல்லாம் இந்திய‌ அர‌சினை வ‌ழிந‌ட‌த்திச் செல்லும் அரசின், ஆளும் கட்சியின் காது ம‌ட‌ல்க‌ளைக் கூட‌ தொட‌ இய‌ல‌வில்லை என்ற‌ நிலையில் உங்க‌ள் ஆட்சியை அவ‌ர்க‌ள் க‌விழ்க்கும் முன்பாக ஈழத்தில் தமிழினப்படுகொலை செய்ய மறைமுக உதவியைச் செய்யும் காங்கிரசு அரசை நீங்கள் கவிழ்க்க உங்களுக்கு தாராளமான ஏராளமான காரணங்கள் இருக்கிறது முதல்வர் அவ‌ர்க‌ளே!

*"வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை சென்று வருவதற்கு இயலாத காரணம் எதுவும் இருந்தாலும் அதனையும் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கலாம். அல்லது எது தக்க காலம், நேரம் என்பதையாவது எடுத்துரைத்திருக்கலாம். அப்படியெதுவும் நடைபெறாதது, மாநில அரசைப் பொறுத்தவரையில் வேதனையான நிலையாக உணரக் கூடியதுதான்". சொல்லியிருக்கிறீர்க‌ளே, அதுதான்..... அந்த‌ ஏமாற்ற‌ம் த‌ந்த‌ வ‌லிதாளாம‌ல் தான், மாநில முதல்வரையே துச்சமாக எண்ணிவிட்டார்களே என்ற வேதனையின வெளிப்பாடாகத்தான், வேறு எதாவ‌து செய்ய‌லாம் என்று தோன்றுவ‌தையெல்லாம் ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் முதற்கொண்டு உண்ணாவிரதம், மவுன விரதம் என்று புதிது புதிதாகச் செய்கிறார்க‌ள்.

அதுமட்டுமில்லை. ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி, வகுப்பு புறக்கணிப்பு என்று போராட்டத்தில் குதித்து தெருவுக்கு வந்துள்ளனர். தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்கள் ஈழத் தமிழர்கள் மீது கொலைவெறியாட்டம் போடும் சிங்கள இனவெறி அரசின் போரை நிறுத்துமாறு வகுப்புக்களை புறக்கணித்து போராடுகின்றனர். மக்கள் போராட்டம் மெல்லமெல்ல வெடிக்கத் துவங்கிவிட்டது, முதல்வர் அவர்களே!

**1948-ல் இலங்கையில் 75 லட்சம் சிங்களர்களும், 37 லட்சம் தமிழர்களும் இருந்தனர். ஆனால், சிங்களர்கள் எண்ணிக்கை 1.40 கோடியாகவும், தமிழர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்குப் பதிலாக 35 லட்சமாக குறைந்தும் உள்ளது. திட்டமிட்டே தமிழினம் அழிக்கப்பட்டுள்ளது. இன்னும் அழித்துக்கொண்டே இருக்கிறார்க‌ள். சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் என்ற பெயரால் அப்பாவித் தமிழர்கள் அன்றாடம் அங்கே உயிர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள், என்பதை நீங்களும் அறிவீர்கள்தானே!

*ஐ.நா.சபை அகதிகள் உதவிப் பிரிவு ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ரான் ரெட்மான்ட்,"கிழக்குப் பகுதியில் உயிரிழப்போர் மற்றும் காயமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், குடும்பங்கள் பயம் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறிவிட்டதாகவும் தாக்குதலுக்குப் பயந்து ஏராளமானோர் தற்போது இரவு நேரத்தில் தங்கள் வீடுகளில் உறங்காமல், அனைவரும் ஒன்றாக ஏதேனும் ஒரு வீட்டில் உறங்கி வருகின்றனர் என்றும் மோதல் நடைபெறும் இலங்கையின் வடக்குப் பகுதியில் இரண்டரை லட்சம் மக்கள் உள்ளதாகவும் அங்கு நிலவரத்தை நாங்கள் தீவிரமாக கவனித்து வருகிறோம்".என்றும் தெரிவித்துள்ளார்.

*இலங்கை அதிபராக ராஜபக்சே பதவியேற்ற நாள் முதல் இதுவரை 4 தமிழ் எம்.பி.க்களும், பத்திரிகை ஆசிரியர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். பள்ளிகள் மீதும் குண்டுகளை வீசி ஏராளமான குழந்தைகளை இலங்கை ராணுவம் கொன்று வருகிறது. இலங்கைக்கு முழு ராணுவ உதவிகளையும் இந்திய அரசுதான் செய்து வருவதாக இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். இதுப‌ற்றியெல்லாம் யோசித்து ஒரு தீர்க்க‌மான‌ முடிவுக்கு வ‌ந்தாக‌ வேண்டிய‌ நெருக்க‌டியான‌ கால‌க‌ட்ட‌த்தில் நீங்க‌ள் இப்போது!

போர் எப்போது ஓயும்? த‌மிழ‌ர்க‌ள் எப்போது அங்கே நிம்ம‌தியாக‌ இருப்ப‌து? பிர‌பாக‌ர‌னைப் பிடித்தால்தான் இல‌ங்கை போர் ஓய்ந்த‌தாக‌ அறிவிக்கும்? பிர‌பாக‌ர‌ன் சிங்க‌ள இராணுவத்தின் பிடியில் சிக்க‌ப்போவ‌தில்லை; இந்திய‌ தேச‌த்தில் சுதந்திர வேட்கைக்காக ஆயுதமேந்தி எப்ப‌டி ஒரு நேதாஜி சுபாஷ் ச‌ந்திர‌போஸ் இருந்தாரோ அது போல‌ த‌மிழ் ஈழ‌ம் என்ற‌ உத‌ய‌த்தில்தான் ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளுக்கு விடிவுகால‌ம் என்று எண்ணி, கியூபாவின் பிட‌ல் காஸ்ட்ரோ போல‌ நெஞ்சிலே உர‌மேற்றி த‌மிழ‌ர்க‌ளுக்காய் வீர‌ப்போர் புரியும் பிர‌பாக‌ர‌ன் ஒருக்காலும் சிங்க‌ள‌ச் சிப்பாய்களிட‌ம் சிக்க‌ப்போவ‌தில்லை!

முல்லைத்தீவையே முழுமையாக‌ப் பிடித்துவிட்டோம். ஒருமாதகாலத்துக்கு வெற்றியைக் கொண்டாடுங்கள் என்று சொல்லிய நிலையிலும் பிர‌பாக‌ர‌ன் சிங்க‌ள‌ இராணுவ‌த்திட‌ம் அக‌ப்ப‌டவில்லை;அகப்படப்போவதுமில்லை! இப்போது இன்னும் உக்கிர‌மாகத் த‌மிழ‌ர்களை, எங்கே பிர‌பாகர‌னை ஒளித்துவைத்திருக்கிறீர்கள்? என்று இன்னும் கூடுத‌லாக‌ த‌மிழ‌ர்க‌ளை கொன்றொழிப்ப‌து தொட‌ர்க‌தையாக‌ ந‌ட‌ந்து கொண்டு தானிருக் க‌ப்போகிற‌து? இந்த‌ப் பிர‌ச்னையை எப்ப‌டித்தான் தீர்க்க‌ப்போகிறீர்க‌ள் முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே?

உங்க‌ள் ந‌ட‌வ‌டிக்கையை த‌மிழ் உல‌க‌ம் க‌ண்கொட்டாம‌ல் பார்த்துக்கொண்டிருக்கிற‌து. இது உங்க‌ள் வாழ்நாளில் இறுதிச் சாத‌னையாக்குவ‌து உங்க‌ள் க‌ர‌ங்க‌ளில் இருக்கிற‌து என்று இன்ன‌மும் கொஞ்ச‌ந‌ஞ்ச‌ ந‌ம்பிக்கையோடு எதிர்பார்ப்போடு இருக்கிறோம்!

"தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகளின் நடவடிக்கைகள் காரணமாக- இது இலங்கைத் தமிழரைப் பாதுகாக்கும் பிரச்சினை என்றில்லாமல்- ஏதோ காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சினை என்ற கோணத்தில் திருப்பி விடப்பட்டுள்ளது." என்று உங்க‌ள் அறிக்கையை நினைத்து சிரிப்ப‌தா? அழுவ‌தா? என்று, அன்று தெரிய‌வில்லை! ஆனால், இன்றைக்கு நீங்க‌ளே காங்கிர‌சை ந‌ம்பிப் புண்ணிய‌மிலை என்ற முடிவுக்கு வ‌ந்திருப்பீர்க‌ள்

இந்த நிலை ஏற்படக் காரணம் என்ன?

நீங்கள் பிரதமரிடம் மேற்கொண்ட‌ முயற்சிகளெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகப் போய்விட்ட பிறகு உங்களைப்போல மற்றவர்களும் பொறுமை காக்கும் விதயமா இது? ஆற அமரப் பேசித் தீர்க்க போரை நிறுத்தியிருந்தால் காங்கிரசுக்கட்சியை தலைமேல் அல்லவா தூக்கிவைத்துக் கொண்டாடியிருப்பார்கள்; அது நடக்கவில்லையே அதனால்தானே காங்கிரசைச் சாடுகிறார்கள். தமிழக அரசு இலங்கைப்பிரச்னையில் நாடகமாடுகிறது என்றால் அது திமுகவைச் சாராதா?

இர‌ண்டாவ‌து அத்தியாயம்

அனைத்து கட்சிகளை ஒருங்கிணைத்து அறவழியில் எத்தனை எழுச்சியைத் தமிழ் மக்கள் வாயிலாக உணர்த்த வேண்டுமோ; அந்த வழிகளில் எல்லாம் உணர்த்தி விட்டு, பிரதமரையே சந்தித்து வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை சென்று முயற்சி மேற்கொள்வது என்ற திட்டத்துடன் இந்த அறப்போரில் ஒரு அத்தியாயம் முடிவுற்றது, என்று ஒரு அறிக்கையில் சொல்லியிருந்தீர்க‌ள்.

இது இர‌ண்டாவ‌து அத்தியாயம் என்றே வைத்துக்கொள்வோம், க‌லைஞ‌ர் அவ‌ர்க‌ளே இது நீங்க‌ள் அர‌சிய‌ல் அரிச்சுவ‌டியைத் துவ‌ங்கிய‌ கால‌ம‌ல்ல‌; இந்த‌க்கால‌ம் க‌ணினியுக‌க் கால‌ம்! எதையும் மின்ன‌ல்வேக‌த்தில் செய‌லாற்ற‌வேண்டிய‌ கால‌ம்!

இலங்கைப் பிரச்னையில் இந்திய அரசு மிகவும் அலட்சியம் காட்டுகிறது. இதில் உங்கள் தலைமையிலுள்ள‌ திமுகவுக்கும் பங்கு உள்ளது. இப்பிரச்னையில் தமக்குள்ள பொறுப்பையும், கடமையை நீங்களும் தட்டிக் கழிக்க முடியாது. வெறும் அறிக்கை ஜாலங்களால் எதையும் சாதிக்க இயலாது!

நீங்கள் காங்கிரசை திருப்திப்படுத்த வண்ணவண்ண அறிக்கைகள் மட்டும் விட்டுக்கொண்டிருந்தால் இலங்கையில் தமிழ் இனமே அழிந்துபடும் பேரபாயம் நிமிடத்துக்கு நிமிடம், நொடிக்கு நொடி அதிகரித்துவருகிறது. தமிழக அரசினை....திமுக ஆட்சியைக் கவிழ்க்க இந்திய அரசால் முடியும் என்றால், இந்திய அரசினை...காங்கிரசு ஆட்சியைக் கவிழ்க்க திமுக எம்பிக்கள் ஆயுதம் என்ற‌ ஒன்று உங்கள் கையிலும் இருக்கிறது என்பதை நான் நினைவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளேன், முதல்வர் அவர்களே!

க‌டித‌ம் நீண்டுவிட்ட‌து வ‌ழ‌க்க‌ம்போல‌! அடுத்த‌ ம‌ட‌லில் த‌மிழ‌க‌த்தில் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளை நீங்க‌ள் எத்துணை அக்க‌றையோடு க‌வ‌னிக்கிறீர்க‌ள் என்ப‌த‌ற்கு உரிய‌ ஆதார‌ ஆவ‌ண‌ங்க‌ளோடு அடுத்த‌ம‌ட‌லில் ச‌ந்திக்கிறேன்.

அடுத்த மடலில் சந்திக்கும்வரை

அசாதாரணத் தமிழன்,

- ஆல்பர்ட் பெர்னாண்டோ,
விஸ்கான்சின், அமெரிக்கா.

http://tamil.sify.com/columns/fullstory.php?id=14848539

http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=1045