Saturday, January 24, 2009

தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்! (2)

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.
மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங் பல்கலைக்கழகத்தில் 96-வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைக்கச் சென்ற இடத்தில் கூட நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, "தீவிரவாத பிரச்சினையில் பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசத்தின் இந்தியாவுக்கு எதிரான நிலையை இனியும் சகித்துக்கொள்ள முடியாது” என்று எச்சரிக்கை விடுத்ததோடு, “தீவிரவாதம் இன்று பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அவர்களுடன் சமரசத்திற்கு இடமில்லை. எனினும், ஆயுதங்களை கைவிடும் குழுக்களுடன் பேச்சு நடத்தத் தயாராக இருக்கிறோம். அதேநேரத்தில், தீவிரவாதத்தை வேரறுக்க எத்தகைய நடவடிக்கையையும் மேற்கொள்ளத் தயங்க மாட்டோம்'' என்று திட்டவட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சரி. ஷில்லாங் போனார்; சொன்னார். சென்னையில் ‘எம்மினம் அழிகிறது’ என்று ஒவ்வொருவரும் விதவிதமான அணுகுமுறையில் பெருங்குரலெடுத்துப் போராட்டம் நடத்திய நடத்திக் கொண்டிருக்கிற இடத்துக்கு வந்த, இந்திய இறையாண்மை காக்கும் நம்ம பிரதமர் நிகழ்வுகளில் கலந்துகொண்டு பேசியது என்ன? பேசத் தவறியது என்ன? உங்களுக்கே "பளிச்"சென்று புரியவில்லையா?

பிரதமர் சென்னையில் கால் வைத்த நேரத்தில் நம் இலங்கை வாழ் தமிழரின் துயரச் செய்திகள் இதுதான்!

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி மற்றும் தருமபுரம் பகுதிகளில் சிங்கள அரச படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 11 மாதக் கைக்குழந்தை உட்பட 5 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 4 சிறுவர்கள் உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

முகமாலையில் இருந்து முன்னேறி வரும் இலங்கை ராணுவம் தற்போது பள்ளையை கைப்பற்றியிருப்பதாகவும், தங்களது நிலையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு படைகள் முன்னேறியிருப்பதாகவும் இலங்கையின் வடக்கே கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இரண்டு படகுகள் மீது இலங்கை விமானப் படையின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து அவற்றை அழித்ததாகவும் செய்திகள்!

தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு புதன்கிழமை வந்த அகதிகள் கூறியதாவது, "கிளிநொச்சியில் உள்ள முரசு மொட்டை பகுதியில் சிங்கள ராணுவத்தினர் அங்குள்ள முருகானந்தா மகா வித்யாலயா பள்ளி மீது குண்டு வீசினர். அங்குள்ள ரோமன் கத்தோலிக்க பள்ளி மீதும் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த 2 பள்ளிக் கட்டிடங்களும் இடிந்து தரை மட்டமானது. அத்துடன் அருகில் இருந்த பொதுமக்களின் வீடுகளும் இடிந்து தரைமட்டமாயின.

கிளிநொச்சியை சுற்றி வசித்த 3 லட்சம் தமிழர்கள் அங்கிருந்து வெளியேறி, முல்லைத் தீவு செல்லும் வழியான பரமந்தன், புளியங்குளம், புதுகுடியிருப்பு, விஸ்வமடு, ஒடுசுடான் பகுதிகளில் கடுங்குளிரிலும், வெயிலிலும் வீடுகள், உடமைகளை இழந்து வெட்ட வெளியில் தங்கியுள்ளதால், இலங்கை ராணுவத்தின் குண்டுகள் எப்போது, எங்கே விழும் எனத் தெரியாததால் தமிழர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.

இந்தச் சோகங்களோ, அவர்களின் வேதனைகளோ எள்முனையளவு கூட பிரதமருக்கு இல்லை;அவருக்கு கவலையும் இல்லை; அவருக்கு பாகிஸ்தான், காசா, மும்பை என்று எவ்வளவோ தலைப்பாகை உருளும் தாடி நீவும் பிரச்னைகள் ஏராளம்!

ஆனால், இந்தச் சோகங்கள் உங்களைக்கூடவா பாதிக்கவில்லை. விமானம் ஏறிக் கும்பிடப்போன சாமி இப்போது நீங்கள் இருக்கும் இடத்துக்கு வந்தபோது எது மிக முக்கியம்? இதை உள்ளம் குமுறிக்கொண்டிருக்கும் தமிழ் உணர்வாளர்களோடு சென்று சந்திக்க என்ன தயக்கம் உங்களுக்கு முதல்வர் அவர்களே!? இதற்கப்புறமாகவல்லவா அடுத்த நிகழ்வுகளை நீங்கள் கவனித்திருக்க வேண்டும்! தவறு செய்துவிட்டீர்கள் முதல்வர் அவர்களே!

இதோ சென்னை நிகழ்வில் பிரதமர் பேசியது உங்கள் நினைவுகளுக்கு.....

“சமீபத்தில் மும்பையில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்கள் நம்முடைய இந்த பாரம்பரியத்திற்கு தீவிரவாதத்தால் எத்தனை பெரிய அச்சுறுத்தல் காத்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இந்தியாவுக்கு எதிராக சதிதிட்டம் தீட்டும் தீவிரவாதிகளுக்கு எந்த நாடும் புகலிடம் கொடுக்க அனுமதிக்க மாட்டோம். இந்த முயற்சியில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்போடு வெற்றி பெறுவோம்.”

இத்தோடு நிறுத்தினாரா... இன்னும் ஒரு படி மேலே போய், "இஸ்ரேல் படைகள் காசா பகுதியில் நடத்திவரும் தாக்குதல் குறித்துப் பேசியபோது இஸ்ரேல் காசா பகுதியில் நடத்திவரும் தாக்குதலை நிறுத்தவேண்டும் என்றும் அங்கு அமைதியை நிலைநாட்டவும், இயல்புநிலை திரும்பச் செய்ய அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு விரைவில் தீர்வு காணும்" என்று எவ்வளவு அழுத்தம் திருத்தமாக எங்கோ நடக்கும் அநீதிக்கு தமிழகத்தில் நின்றுகொண்டு குரல் கொடுக்கிறார் குரல்கொடுக்க வேண்டியதற்குக் கொடுக்காமல்!

அப்போது அவரது பேச்சை நீங்களும் கேட்டு இரசித்துக்கொண்டிருந்ததுதான் மிக வேதனையான விசயம். ஒரே ஒரு வார்த்தை இலங்கையில் அமைதி நிலவ தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என்று சொல்லியிருக்கலாம். தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் முகர்ஜியை அனுப்பி போரை நிறுத்த அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொள்ளும், என்று சொல்லியிருக்கலாம்; காசாவில் அமைதி திரும்ப அனைத்துலக நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தீர்வு காணும் என்ற பிரதமருக்கு இலங்கையின் தீவிரம் புரியாமல் போனது ஏன்?

புரியாமல் இல்லை முதல்வர் அவர்களே, அப்படிச் சொன்னால் அவருடைய வண்டவாளம் சென்னை தண்டவாளத்தில் தவழ்ந்திருக்கும்! அடுத்த நிமிடமே சிங்கள அரசு,"ஏன் அய்யா, நீங்களே போர் தளவாடங்கள் கொடுத்தீர்கள்! எங்கள் வீரர்களுக்குப் பயிற்சி கொடுத்தீர்கள்! நீங்களே எங்களுக்கு போருக்குரிய வீரர்களையும் அளித்தீர்கள்! போதும்போதாதற்கு எங்கள் இராணுவத்துக்கு செலவுக்கு காசும், பணமும் அள்ளியள்ளிக் கொடுத்தீர்கள்! போரை நடத்த ஆசியும் வழங்கினீர்கள். இப்போது போரை நிறுத்து என்று சொன்னால் எப்படி? என்று அங்குள்ள இராணுவக் கோமாளியே கேப்பானே!?

சிந்தித்துப் பாருங்கள் முதல்வர் அவர்களே! இங்கிருந்து டெல்லிக்கு நீங்கள் சர்வகட்சித் தலைவர்களுடன் படையெடுத்துச் சென்று பிரதமரைச் சந்தித்து ஒருமாதம் உருண்டோடிவிட்டது. சென்னை வந்த பிரதமரும் எந்தெந்த நாட்டுக்கோ வக்காலத்து வாங்கிப் பேசிவிட்டு இலங்கைப் பிரச்னையை தொடாமலே சென்றது உங்களுக்கு கொஞ்சம்கூட உறைக்கவில்லையா?

"நான்தான் கவர்னர் மாளிகையில் சந்தித்தபோது என்னிடம் விரைவில் முகர்ஜியை அனுப்புகிறேன் என்று பிரதமர் சொன்ன வாக்குறுதியை பத்திரிக்கைகளுக்கு அறிக்கையாகக் கொடுத்தேனே என்று நீங்கள் சப்பைக்கட்டாகச் சொல்லலாம்" அதை பிரதமரே, ஏன் அறிக்கையாக விடவில்லை?; அவர் சென்னை வரும் முன்பே நீங்களும் அவரும் இரகசியமாகப் பேசியது என்ன? என்று விபரம் தெரிந்தவர்கள் கேட்கிறார்களே?

7 நாட்டு இராணுவமும் சேர்ந்து முல்லைத்தீவையும் பிடித்து முற்றிலுமாக விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம் என்று அறிக்கை வரும் வரை பிரதமர் முகர்ஜியை அனுப்பப் போவதில்லை என்பதுதானே உண்மை! அதுவரை நீங்கள் அய்யோ காப்பாற்றுங்கள் என்று அலறுங்கள்;நானும் இதோ காப்பாற்றுகிறேன் என்று சொல்கிறேன்" என்பதுதான் இருவருக்குமிடையே உள்ள இரகசிய உரையாடல் என்று தமிழர்கள் சந்துபொந்துகளில் எல்லாம் சர்வ சாதாரணமாக பேசுவது உங்கள் காதுகளிலும் விழுந்திருக்கக்கூடும்தானே!

விமானம் ஏறி டெல்லிக்கு சர்வ கட்சியையும் கூட்டிச்சென்ற உங்களுக்கு அதே சர்வ கட்சியினர் எல்லோரையும் கறுப்புக்கொடி காட்டவேண்டாம், வாருங்கள் நாம் பிரதமரை இங்கேயே இரண்டிலொன்று கேட்டுவிடுவோம் என்று எப்போது நீங்கள் சொல்லத் தவறினீர்களோ அப்போதே கொஞ்சநஞ்சமிருந்த உங்களின் இலங்கைத் தமிழர் காப்பெல்லாம் சாயம் கலைந்து வெளுத்துப் போய்விட்டது.

இதுவரை இந்திய இறையாண்மையைக் காக்கும் நம்ம பிரதமரும், இலங்கை ஆட்சியாளர்கள், இராணுவத் தலைவன் பொன் சேகன்தான் தமிழர்களை இளிச்சவாயர்கள் என்று நினைக்கிறார்கள் என்று தமிழ் உணர்வாளர்கள் மிகுந்த வேதனைப்பட்டுக்கொண்டிருந்தனர். பிரதமரின் சென்னை நிகழ்வுகள் உங்களையும் அந்தப் பட்டியலில் சேர்த்துவிட அடையாளம் காட்டிவிட்டீர்கள்!

மும்பை தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எத்தனை முறை பிரதமரும், வெளியுறவு அமைச்சரும் அறிக்கைகளும் எச்சரிக்கைகளும் விட்டிருக்கின்றனர். இதைப் பாராட்டும் அதே நேரத்தில் கோடிக்கணக்கான தமிழர்களின் சார்பில் கடிதம் மூலமாக, தொலைபேசி மூலமாக நேரிலும் சென்று நீங்கள் சர்வகட்சிப் பிரமுகர்களுடன் சென்று சொல்லியும், பிரதமரோ வெளியுறவு அமைச்சரோ ஒரு முறையாவது நாவசைத்தார்களா? இல்லையே!? போரை நிறுத்த ஒரு அமைச்சரை அனுப்பிச் சொல்லவேண்டாம். வாய்வார்த்தையாக இங்கிருந்து ஒரு எச்சரிக்கை கூட விட இயலாத அளவுக்கு பிரதமரையும் வெளியுறவுத்துறை அமைச்சரையும் தடுத்து நிறுத்தும் சக்தி எது?

வாய்மூடி மவுனியாக இருப்பது கூட பரவாயில்லை; ஏழரைக்கோடி தமிழர்களுக்கு முதல்வராக இருக்கும் உங்களிடமும், நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் ஆதரவாகப் பேசிக்கொண்டே நயவஞ்சகமாக இராணுவ அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்ப வைத்த சக்தி எது?

கடந்த ஆண்டு அக்டோபரில் தமிழகச் சட்டப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய உடனேயே, முன்னாள் தூதர்கள் என்.என்.ஜா, கே.பி.எஸ்.மேனன், அனைத்திந்தியக் காங்கிரசின் வெளியுறவுப் பிரிவு இணைச் செயலர் ராவ்னி தாக்கூர் ஆகியோர் அடங்கிய உயர் நிலைக் குழு ஒன்று டெல்லியில் இருந்து கொழும்புக்குச் செல்ல வைத்த சக்தி எது முதல்வர் அவர்களே?

மத்திய அரசு, தமிழக அரசியல்வாதிகள் கூறுவதை செவிமடுக்காது என்றும், போர்ப்படை நடவடிக்கைகளை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தாது என்றும் பொருள்படும் வகையில் அந்தக் குழு அங்கு வெளிப்படையாக அறிக்கைகள் வெளியிட்டதே!? அப்படிச் சொல்ல வைத்த சக்தி எது? டெல்லிக்கும், கொழும்புக்கும் இடையே அப்படிக் கள்ளக்காதல் கொள்ள வைத்த சக்தி எது முதல்வர் அவர்களே?

இந்தியாவுக்கு சம்பந்தமே இல்லாத பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் குண்டு வீசியதைக் கண்டித்து, இந்திய அரசு, "உடனடியாக இராணுவ நடவடிகையை நிறுத்தவேண்டும்" என்று எச்சரிக்கை விடுகிற இந்திய அரசு தன் நாட்டுமக்களையே ஈவு இரக்கமின்றி வெறித்தனமாக தாக்கும் இலங்கை அரசை கண்டித்து அறிக்கை விடுவதைத் தடுக்கும் சக்தி எது?

தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் அவமதித்து விட்டு சிங்களர்களுக்கு வெஞ்சாமரம் வீசும் இந்திய அரசின் துரோகப்போக்கை உங்களால் இன்னும் எப்படித் தாங்கிக்கொண்டிருக்க முடிகிறது முதல்வர் அவர்களே!?

ஒரு இனம் மெல்ல அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. நம் தமிழ் சகோதரர்களும், சகோதரிகளும் அங்கு வாழும் வகையற்று அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அந்த பிள்ளைகளுக்கு எதிர்காலம் என்ன என்பதே தெரியாத நிலை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நீங்களே சொல்லியதுபோல நொடிக்கு ஒரு உயிர் அங்கு சிங்களப் பேரினவாத அரசால் கொன்றொழிக்கப்பட்டு வருகிறதே; கடந்த டிசம்பர் நாலாம் தேதி பிரதமரைச் சந்தித்து வந்தநாள் முதள் இந்த நாள் இந்த நிமிடம், இந்த நொடிவரை மவுனம் சாதித்து இலங்கையரசோடு கள்ள நட்பு கொண்டு வரும் காங்கிரஸ் தயவு இன்னும் வேண்டுமா உங்களுக்கு முதல்வர் அவர்களே? தமிழ்ச்செல்வன் மறைந்தபோது நீங்கள் உணர்வுப்பூர்வமாக எழுதிய கவிதைக்கு காங்கிரசார் என்ன சொன்னார்கள்? நீங்கள் மறந்திருக்க முடியாது! அவர்கள் உங்கள் கவிதையைக் கண்டு பொங்கி எழுந்தபோது நீங்களும் பொங்கினீர்கள்...உள்ளுக்குள்!

தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசுவது அந்த இயக்கத்திற்கு உதவுவதாகாது என்று 2007ம் ஆண்டு சட்டப்பேரவையில் உங்களாலேயே கூறப்பட்டதை நீங்கள் மறக்கவோ மறுக்கவோ இயலாது; அப்படி இருக்கும்போது, தமிழினத்தை துடைத்து எறிய கங்கணம் கட்டிச் செயல்பட்ட சிங்களப்பேரினவாத அரசுக்கு துணைபோகும் மத்திய அரசைக் கண்டித்துப் பேசும்போதெல்லாம் இனமான சிங்கம் சீமான், அமீர் போன்றோரை கைதுசெய்து சிறையிலடைத்த போதெல்லாம் உங்கள் மனச்சாட்சி இது தவறு என்று கூவவில்லையா?

காங்கிரசை நீங்கள் தூக்கியெறிந்தால்தான் காங்கிரசுக்கும் புத்திவரும்! தமிழக தமிழர்களுக்கு மனமிரங்காதவர்கள் தமிழகத்தில் வேரோடும், இந்தியாவில் வேரடி மண்ணோடும் காணாமல் போகவேண்டும் முதல்வர் அவர்களே! அப்போதுதான் உங்கள் மேல் படிந்துள்ள களங்கம் கரையும், காணாமல் போகும்!


நீங்கள் பார்க்காத நாற்காலியா? நீங்கள் செய்யாத அரசியலா? உங்களுக்குத் தெரியாத இராஜதந்திரமா?


உலகத் தமிழர்களின் பாதுகாவலர் என்பதை நீங்கள் நிலைநிறுத்தவேண்டுமென்றால் உடனடியாக தமிழினத் துரோகம் புரியும், இலங்கைப்பேரினவாத அரசுக்குத் துணைபோகும் நடுவணரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் கண்மூடும் வரை தமிழகத்தில் முதல்வராகவே இருக்கலாம். இல்லையென்றால் திமுகவையே காங்கிரசோடு சேர்த்து எதிர்வரும் தேர்தலில் காணாமல் போகவைக்கும் சூழல் ஏற்படுவதை யாராலும் தடுக்க இயலாது முதல்வர் அவர்களே! அந்த அதிர்ச்சியை உங்களால் தாங்க முடியுமா?

அடுத்த மடலில் சந்திக்கும்வரை

அசாதாரணத் தமிழன்,

- ஆல்பர்ட் பெர்னாண்டோ,
விஸ்கான்சின்,
அமெரிக்கா.
http://www.keetru.com/literature/essays/albert_4.php
 
http://sify.com/tamil/art/vesa/fullstory.php?id=14837371

தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்!

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,

வணக்கம்.
85 அகவையிலும் ஈழத் தமிழருக்காக அவர்தம் நிம்மதியான வாழ்க்கைக்காக நீங்கள் சமீபத்தில் முன்னெடுத்த முயல்வுகளை எல்லாம் ஒவ்வொன்றாக எண்ணிப்பார்க்கிறேன். சர்வகட்சிக்கூட்டம், மத்திய அரசுக்கு கெடு, கொட்டும் மழையில் மனிதச் சங்கிலி போராட்டம்,எம்.பிக்கள் ராஜினாமா, நிதி வசூலித்து உயிரினுமினிய நம் உறவுகளுக்காய் உணவுப்பொருட்கள் அனுப்பிவைக்க மேற்கொண்ட அணுகுமுறைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து கோரிக்கையளிப்பது அதனைத் தொடர்ந்து சர்வ கட்சித் தலைவர்களோடு நீங்களே பிரதமரைச் சந்தித்து கோரிக்கையளித்து உறுதியோடு நின்றதை உலகமே உற்று நோக்கியது; உடனடியாக வெளியுறவு அமைச்சரை இலங்கைக்கு அனுப்பவேண்டியும் நீங்கள் கோரிக்கை வைத்தபோது நாங்கள் அகமகிழ்ந்தோம். ஒவ்வொரு நாளும் பிரணாப் முகர்ஜியை அனுப்புவார் பிரதமர், அனுப்பிவிட்டாரா என்று எங்கள் கண்கள் செய்தித்தாள்களில் பத்திபத்தியாகத் தேடியது; எங்கள் செவிகள் எந்த வானொலியாவது இந்தச் சேதியை காதுகுளிரச் சொல்லாதா என்று செவிமடுத்தோம்; விழிகள் காணொளிச் செய்தியிலாவது வந்துவிடாதா என்று ஏங்கியது.


ஆனால் எங்கள் கண்களில் தட்டுப்பட்ட செய்தியெல்லாம் இன்று இலங்கையில் குண்டு வீசியதில் பரீட்சை எழுதிய மாணவி சாவு; வயோதிகத்தாய் மரணம் என்றும் எங்கள் செவிகள் செவிமடுத்ததெல்லாம் தமிழர் பகுதியில் இலங்கை இராணுவம் குண்டுவீசியதில் கட்டிடங்கள் சேதம், கால்நடைகள் பலி என்றும் எங்கள் விழிகள் விழிநீர் பெருக்கிக் காணொளிச் செய்தியில் கண்டதெல்லாம் உறவுகள் கதறக் கதறக் குருதிச் சகதியில் சிதைந்து போன சடலங்களில் என் பிள்ளை இதுவா என்ற தேடுதல்களில்...குண்டுதுளைத்த உடலில் வழிந்தோடும் குருதியைக் கிடைத்த துணியில் சுற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடும் தாயை...அப்பா, இனி இந்த வீட்டிலிருக்க வேண்டாம் எங்காவது காட்டுப்பக்கம் போயிடலாம். அங்கே குண்டு போடமாட்டாங்கப்பா என்று பச்சிளம் பிஞ்சு சொன்ன சேதிகளை.... ஒருவேளை நீங்களும் கேட்டிருக்கலாம்.




200 உயிர்ப்பலிக்கு காரணமான தீவிரவாதிகளை ஒப்படைக்கவேண்டும் என்று கடுமையான எச்சரிக்கை விடுகிற இந்திய அரசாங்கம், நாளும் இலங்கையில் தமிழினத்தை கொன்று குவிக்கும் சிங்கள இராணுவத்துக்கு உரக்க ஒரு எச்சரிக்கை கொடுக்கக்கூட இயலாத இந்திய அரசு?! மும்பைப் படுகொலையில் தீவிரவாதிகளை ஒப்படைக்க கெடு கொடுத்து போருக்கே தயார் என்று பாகிஸ்தானையே கிடுகிடுக்க வைக்கிற இந்திய அரசு இலங்கைத் தமிழரைக் காப்பாற்ற இன்றுவரை இந்திய அரசு ஏதும் செய்யவில்லையே!? ஏன்? பிரணாப் முகர்ஜி இலங்கை செல்ல நல்லநேரம் பார்த்துக்கொண்டிருக்கிறாரா? அவர் போவதில் என்ன தாமதம்? நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் சேர்ந்துபோய்ச் சொன்னார்களே? அதற்கும் மதிப்பில்லையா? சர்வகட்சித்தலைவர்களோடு நீங்கள் போய்ச் சொன்ன உங்கள் சொல்லுக்கும் அவ்வளவுதான் மரியாதையா?



என்றைக்கு வெளியுறவு அமைச்சர் இலங்கைக்குப் போய் இராசபக்சேவின் ஒரு நாள் விருந்துண்டு பின் இந்தியா வந்து போரை விரைவில் நிறுத்திவிடப் போவதாக மகிந்த உறுதியளித்துள்ளார் என்று செய்தித்தாளில் ஒரு அறிக்கை விடப்போகிறார்? அதுவரை எம் தமிழினம் நாளும் செத்துமடியவேண்டியதுதானா? தமிழக அரசியல்வாதிகள் ஒரு விசயத்தில் கூட ஒற்றுமையில்லாதவர்கள் என்று எண்ணித்தானே அங்குள்ள இராணுவத்தலைவன் அகம்பாவதோடு இந்திய அரசியல்வாதிகள் கோமாளிகள் என்று துணிந்து சொல்கிறான்.



வெளியுறவு அமைச்சரை அனுப்பிவைக்கிறேன் என்று உத்திரவாதம் தந்துவிட்டு இந்திய இராணுவ அதிகாரியை வன்னிக்கு ஏன் அனுப்பிவைத்தார் பிரதமர் என்று உங்களுக்காவது தெரியுமா? கடந்த 15/12/08 அன்று இந்திய இராணுவ அதிகாரியோடு அமெரிக்கா, ஜப்பான், பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளின் இராணுவ அதிகாரிகள் வன்னியின் பாண்டியன்குளத்திற்கு ஒன்றாகச் சென்று பாண்டியன்குளத்தில் நிலைகொண்டிருக்கும் இலங்கை இராணுவ அதிகாரிகளைச் சந்தித்துள்ளனர். இவர்களின் வன்னிக்கு சென்றதின் நோக்கம் இலங்கை இராணுவ அதிகாரிகளைச் சந்திப்பதற்கு என்றால் எதற்கு? போரை நிறுத்தச் சொல்லவா? சந்தித்தது குறித்து உங்களுக்குத் தகவலாவது சொன்னார்களா? சொல்லியிருக்க மாட்டார்கள்.



ஏனென்றால்,இவர்கள் பாண்டியன்குளம் போய் வந்த பின் போர் தீவிரமடைந்துள்ளது. பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் கூடியுள்ளன. மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து ஆட்லறி எறிகணைகளை ஏவுகின்றனர். இதனால் சிறுவர்கள், குழந்தைகள், வயோதிபர்கள் உட்பட பொதுமக்கள் உயிரிழப்புக்களையும் உடல் உறுப்புக்கள் இழப்புக்களையும் சொத்தழிவுகளையும் சந்திக்கின்றனர். தொடர்ச்சியாக மழை கொட்டுவதால் தமிழ் மக்களின் துன்பம் பன்மடங்காகியுள்ளது. இலங்கை வான்படை இடம்பெயர்ந்தோர் குடியிருப்புக்கள் மீது குண்டு வீச்சுக்களை அதிகாலையிலும் நள்ளிரவிலும் நடத்தி வருகின்றது. இதனால் இடம்பெயர்ந்த பொதுமக்கள் வாழ்வு படுமோசமாகியுள்ளது. அத்தோடு தடை செய்யப்பட்ட ரசியத் தயாரிப்பு கொத்துக் குண்டுகளையும் பொதுமக்களின் வாழ்விடங்கள் மீது போடுகின்றனர். ஏழு முன்னணி நாடுகளைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகளின் வன்னி சென்றதின் நோக்கம் மனித நேயமற்றது, இவர்கள் அமைதிக்காகவும் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகவும் உதவுவதைத் தவிர்த்து போரை ஊக்குவிக்கச் சென்றிருக்கின்றனர் என்ற அச்சம் தமிழ் நெஞ்சங்களில் நஞ்சாக இறங்கியுள்ளது.



நீங்கள் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள். வாழ்த்துக்கள்!



அந்த சமயத்தில் கூட உங்கள் உரை கண்டு மெய் சிலிர்த்துப்போனோம். எங்கள் மனக் கண் முன் காணொளியாக கசிந்துகொண்டே இருக்கிறது! அந்த உரையை தமிழினம் ஆகா, எங்கள் தமிழ் மண்ணின் முதல்வர் எங்கள் மேல் கருணை கொண்டு ஆற்றியுள்ள உரை எங்கள் மனக்காயங்களுக்கு மருந்திட்டதாக உள்ளது என்று சொல்லி மாய்ந்துபோகிறார்கள். நீங்கள் பேசிய உரையை நானும் நினைவில் கொண்டுவந்து அசைபோட்டுப்பார்க்கிறேன்.



"நான் மீண்டும் தலைவராகி உள்ள இந்த நேரத்தில் இலங்கைத் தமிழர்கள் அங்கு செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டியதுதான் முக்கியமான பிரச்சினை. அதற்காக குறுக்கு வழியிலோ, வன்முறை மூலமாகவோ, தேச விரோதமாக செயல்பட்டோ அதை அடைய விரும்பவில்லை. மத்திய அரசு எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம். என்றாலும் மத்திய அரசு வேகமாக முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. மத்திய அரசு தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு தமிழனின் பிணம் விழுகிறது. எனவே ஏற்கனவே நானும் மற்றக் கட்சித் தலைவர்களும் சந்தித்த போது அளித்த உறுதிமொழியை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று பொதுக்குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். மத்திய அரசு இதற்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுக்கிறேன்.



இலங்கை தமிழர்களுக்காக வாதாடுவதை சிலர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக சொல்லி வக்கிரப் புத்தியுடன் நடந்து கொள்கிறார்கள். அவர்களை புறம் தள்ளி இலங்கை தமிழர்களை காப்பாற்ற அனைவரும் உறுதி ஏற்போம். இலங்கை தமிழர்களுக்காக எதையும் துறப்போம். தேவைப்பட்டால் உயிரையும் துறப்போம்". எங்களின் இதயத் துடிப்பாகநரம்புகளின் நாதமாக, உயிரின் ஓசையாக இருப்பவர் எம் முதல்வர் என்றெல்லாம் கடந்த சிலநாட்களாக சிலாகித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள், இலங்கைவாழ் தமிழர்கள்! இலங்கை தமிழர்களுக்காக எதையும் துறப்போம். தேவைப்பட்டால் உயிரையும் துறப்போம் என்ற உங்கள் வீராவேசமான பேச்சு ஒவ்வொரு இலங்கைத் தமிழன் உயிரிலும் கலந்துவிட்டது. இந்த நேரத்தில் ஒன்றை நான் உங்களுக்கு நினைவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். மத்தியில் உள்ள ஆட்சியாளர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதி மட்டும் இன்றளவும் காப்பாற்றப்பட்டுள்ளது; ஆனால் அவர்கள் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை இம்மிகூட நிறைவேற்றவில்லை.



எனவே இந்தச் சந்தர்ப்பத்தை நீங்கள் நழுவவிடக்கூடாது. நீங்கள் இலங்கை தமிழர்களுக்காக எதையும் துறப்போம்; தேவைப்பட்டால் உயிரையும் துறப்போம் என்றீர்களே. எதையும் துறக்கவேண்டாம். நீங்கள் வாக்குறுதி கொடுத்த அந்த ஆயுதத்தை மீண்டும் உயர்த்திப்பிடிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. 24மணி நேரத்துக்குள் போரை நிறுத்தி இலங்கைத் தமிழர்களை இந்தியா காக்கத் தவறினால் எங்கள் திமுக எம்பிக்கள் இராஜினாமா செய்வார்கள் என்று அறிவியுங்கள்! இது சாத்தியப்படாதவரை இது குறித்து பிரதமரிடமோ அல்லது வேறு எவரிடமும் திமுக அரசு சமரசம் செய்யாது என்பதைத் தெளிவாக தெரிவித்துவிடுங்கள். சரியாக 24மணி நேரம் முடிந்ததும் தயாராக மத்திய அமைச்சர் ஒருவர் மூலம் எம்பிக்கள் ராஜினாமாவைச் சமர்ப்பியுங்கள். இந்திய அரசு வழிக்கு வருகிறதா இல்லையா பார்ப்போம்!



உங்கள் காலத்தில் இதற்கு தீர்வு பிறக்கவில்லையென்றால் எப்போதும் இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு வரப்போவதில்லை; இதைச் சாதித்தால் வரலாறு உங்களை பொன்னெழுத்துக்களில் பொறிக்கும்! சரித்திரத்தில் தனிச் சரித்திரம் படைப்பீர்கள்! இல்லையென்றால்....கலைஞர் அவர்களே வாழ்நாள் சாதனை நிகழ்த்தும் பாக்கியம் உங்களுக்கு கிட்டாமலே போய்விடும்!

(உங்களுக்கிருக்கும் பணிப்பளுவில் ஒரே மடலில் எல்லாவற்றையும் எழுதவிரும்பவில்லை. இன்னும் மடல் என்னிடமிருந்து வரும்)

இப்படிக்கு,

அசாதாரணத் தமிழன்,

ஆல்பர்ட்.

- ஆல்பர்ட் பெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா.
 
http://www.keetru.com/literature/essays/albert_3.php