திமுகவா? சோனியா திமுகவா?
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.
"அ(றிக்கை)க்கப்போர் அறிக்கை மன்னன்"......"அறிக்கை கொண்டான்".....!"வெத்துவேட்டு அறிக்கையான்"..."காமெடி அறிக்கை கில்லாடி"....அடாடா என்ன இதெல்லாம் என்று நீங்கள் கோபமாகக் கேட்பது என் காதுமடல்களில் இடி ஓசையாக விழுகிறது முதல்வர் அவர்களே!
நாளொருமேனியும் பொழுதொருவண்ணமாக நீங்கள் அறிக்கை என்ற பெயரில் அடிக்கும் லூட்டி தாங்காமல் உங்களுக்கு ஒரு "கல்லக்குடி கொண்டான்" போல ஒரு பட்டத்தை வழங்கி கவுரவிக்கலாமா? என்று பார்த்தேன். ஒரு நல்ல பெயர்கூட கிடைக்க மாட்டேன் என்கிறது.
"அய்யோ என் அழகு மகனை மதுரையில் என்ன செய்யக் காத்திருக்கிறார்களோ? ஒன்றுமறியாத என் பிள்ளையை அவர்கள் ஆளும் மாநிலத்தில் துப்பாக்கி ஏந்தி ஓட்டுக்கேட்கும் நிலையில் என் மகன் என்ன பாடுபடப்போகிறானோ என்ற உங்கள் அறிக்கையாகட்டும்,
"அய்யகோ, இலங்கையில் நொடிக்கு நொடி என் இனமக்களை கொன்று குவிக்கிற அந்தக் கொடிய போரை நிறுத்தச் சொல்லி அன்னை சோனியாவிடம், இப்போதைய சூழலில் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் தாயே என்று கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கருணை மனுப்போடும் அறிக்கையாகட்டும்,
"காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்குத் தொடர்ந்து நாங்கள் அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்பதை தமிழக மக்களும் இலங்கை தமிழர்களும் அறிவார்கள்...." என்று நெஞ்சழுத்தத்தோடு கொடுக்கும் அறிக்கையாகட்டும்,
"போரஸ் மன்னரை அலெக்சாண்டர் நடத்தியதைப் போல பிரபாகரனை மரியாதையாக நடத்த வேண்டும்.." என்று இராசபக்சேவை அலெசாண்டர் ரேஞ்சுக்கு உயர்த்திய உங்கள் உளமார்ந்த அறிக்கையாகட்டும்,
"ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவ முடியாது என்று கூறினார். அதைப் போலத்தான் எங்களது
நிலை..." என்ற உங்கள் அடிமை நிலையை சூட்சுமத்தோடு சுட்டும் அறிக்கையாகட்டும்,
"ஈழத் தமிழர் விதயத்தில் மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டியுள்ளது. அது உறுதியான குரலாக ஒலிக்க வேண்டும்..." என்று உங்கள் உறுதியில்லா நிலையை பிட்டுவைக்கும் அறிக்கையாகட்டும்,
"கடந்த 50 ஆண்டுகளாக இந்தப் பிரச்னையில் தீர்வு கிடைக்காமல் உழலும் நிலைதான் உள்ளது. என்று ஒருநாளும், தமிழகத்தில் உள்ள சிலரின் வழிகாட்டுதலால் தவறான முறைகளை விடுதலைப்புலிகள் கடைப்பிடித்ததால்தான் இலங்கைப் பிரச்னை இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறது..." என்று ஒரு நாளும் காமெடி அறிக்கை விடுவதிலாகட்டும்,
"காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ""இலங்கையின் ஒன்றுபட்ட அமைப்பிற்குள் தமிழ் மக்கள் சம உரிமைகளைப் பெற்றிடும் வகையில் தீர்வு காணப்படவேண்டும்'' என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதையெல்லாம் காங்கிரஸ் கட்சியின் கபட நாடகம் என்று சொல்லுவார்கள்..." என்று கபடமாக அறிக்கை விடுவதிலாகட்டும்,
"தா.கி.கதையை இப்போது சொல்லி
தா.பா.வம்புக்கு இழுப்பானேன் தேவையின்றி!.." என்று எதுகை மோனையோடு விடுக்கும் தேர்தல் சுர உளறல் அறிக்கையாகட்டும்,
உங்களை மிஞ்ச அகில உலகத்திலும் ஒருவருமில்லையே! அதனால்தான் "கல்லக்குடி கொண்டான்" போல "அறிக்கை கொடுப்பதில்" வரலாறு படைக்கும் உங்களுக்கு பொருத்தமாக ஒரு பட்டம் கொடுக்கலாம் என்றால் உங்களுக்கு என்ன பட்டம் கொடுப்பது? மூளையைக் கசக்கியும் பொருத்தமாகச் சொல்ல ஒருபட்டப் பெயரும் சிறப்பாக வரமறுக்கிறது.
என்ன பட்டம் கொடுக்கலாம் என்பதை வாசகர்களிடமும், வாக்களர்களிடமும் விட்டுவிடுகிறேன்.
வாசகர்கள் இங்கே சொல்லலாம்;வாக்காளர்கள் வாக்குச் சீட்டின் மூலம் சொல்லலாம்!
சரி.. முதல்வர் அவர்களே," உலக நாடுகளும், ஐ.நா.சபையும் கொடுக்கும் அழுத்தத்தையே மதிக்காத அரசாக இருக்கிறது இலங்கை அரசு....என்று மிக வருத்தப்பட்டு உங்கள் சமீபத்திய அறிக்கையில் சொல்லியிருக்கிறீர்கள்.
நீங்கள் மற்றும் உங்கள் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை கொடுத்த அழுத்தத்தையே உங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரசு அரசே மதிக்கவில்லையே!? நீங்களே படைபரிவாரங்களோடு தில்லிக்கு நேரில் சென்று கொடுத்த அழுத்தத்தையே மதிக்கவில்லை காங்கிரசு அரசு!
நீங்கள் உங்கள் அருந்தவப்புதல்வி கனிமொழி மற்றும் அமைச்சர் பெருமக்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் உங்கள் பிரதிநிதியாகச் சந்தித்து ஈழத்தில் போரை நிறுத்தச் சொல்லவேண்டும் என்று கொடுத்த அழுத்தத்தை இந்தியப் பிரதமரோ, அன்னை சோனியாவோ, ஈழத் தமிழரை கொன்றுகுவிக்க "தனி அமைச்சராகச் செயற்படும் அருளாளர் அமைச்சர் "பிரணாப் ஜி" யோ மதிக்கவில்லையே!? அது உங்களுக்கு கொஞ்சம் கூட உறைக்கவில்லையா? முதல்வர் அவர்களே!
அப்படியானால் இதை உங்கள் கபட நாடகம் என்று நாங்கள் எடுத்துக்கொள்ளலாமா?
ஏனென்றால்,தில்லிக்கே சென்று எனக்கு இந்தத் துறைதான் வேண்டும் என்று ஒரே ஒரு மிரட்டு மிரட்டி கேட்டு வாங்கும் துணிவுள்ள தாங்கள், கொடுக்காவிட்டால் ஆதரவு விலக்கிக்கொள்ளப்படும் என்ற அசாதாரண மிரட்டலுக்கே மிரண்டு உங்களிடம் "நீங்கள் கேட்டதைக் கொடுத்து"சரணாகதியடைந்த காங்கிரசு ஆட்சி உங்கள் அழுத்தத்தை மதிக்கவில்லை என்று எங்களால் எடுத்துக்கொள்ள முடியவில்லை.
அதனால்தான் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன்; காங்கிரசும் நீங்களும் சொல்லிவைத்து விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டு இது, முதல்வர் அவர்களே!
நெஞ்சுக்கு நீதி சொன்ன முதல்வர் அவர்களே,ஈழத்தில் போர் நிறுத்தப்படவேண்டும் என்று நீங்கள் பெருங்குரலெடுத்து அழுவதும், இலங்கை ராணுவத் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இலங்கையிடம் இந்தியா கண்டிப்புடன் தெரிவித்துள்ளது என்று அமைச்சர் பிரணாப் முகர்ஜி முகத்தில் கவலை தோய வெளியே சொல்லி மாய்வதும் யாரை ஏமாற்ற முதல்வர் அவர்களே!
ஈழத் தமிழர்கள் கொத்துக்கொத்தாய் இராசபக்சேவால் கொல்லப்படுவதை காணச் சகியாமல் இனமானத் தமிழர்கள் தீயாடியதை குடும்பத் தகராறில் தீ வைத்துக்கொண்டு செத்துப்போனதாக காவற் துறையை விட்டு அறிக்கை கொடுக்கவைத்துக் கொச்சைப்படுத்திய உங்கள் தமிழீன உணர்வு நாங்கள் அறியாததா?
அன்று நீங்கள் "டாக்டர்" பட்டம் வாங்குவதை எதிர்த்த ஒரு மாணவனை அடித்துக்கொன்று நீச்சல் குளத்தில் வீசிவிட்டு பெற்ற தந்தையையே இவன் என் பிள்ளையல்ல என்று சொல்லவைத்த மனச்சாட்சி இல்லாத திருக்குவளைத் தீபம் அல்லவா தாங்கள்!
கிடக்கிறது கிடக்கட்டும் கிடைத்தவரை வாரிச்சுருட்டு என்ற கொள்கையில் இம்மியும் பிசகாமல் "மகன் நடித்தது பிள்ளையோ பிள்ளை; அப்பன் அடிப்பது கொள்ளையோ கொள்ளை" என்பது அந்தக்காலத்திலிருந்து இந்த நொடிவரை உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் வசப்பட்டது!
தென் மாவட்டங்களில் எம்.எல்.ஏவோ,எம்.பியோ, ஏன் அமைச்சரே எதையும் உங்கள் அழகுப்பிள்ளையின் அனுமதி இல்லாமல் செய்யமுடியாது என்று கொடிகட்டிப் பறந்த வசூல் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி இந்தத் தேர்தலில் வென்றாகவேண்டும் என்ற வேட்கையில், முதல் நாள், ஒன்றும் தெரியாத அப்பாவி என் பிள்ளை என்று அறிக்கை கொடுத்தீர்கள்!
உம் அழகுப் பிள்ளையின் ஆசியில், அற்புதமான காய் நகர்த்தலில் திமுக தேர்தல் அலுவலகங்களுக்கு தீ வைக்கப்படுகிறது. அடுத்த நாள் அரிவாள் வெட்டு விழுகிறது ஓர் மக்கள் பிரதிநிதிக்கு!
காவற் துறையை கையில் வைத்துக்கொண்டு என்ன செய்கிறீர்கள்? இமை மூடி வெற்றிக் கனவில் ஆழ்ந்திருக்கிறீர்கள், முதல்வர் அவர்களே!
ஒன்றுமறியாத உங்கள் அழகுப்பிள்ளை ஒரு பத்திரிக்கை அலுவலகத்தையே உயிர்களோடு கொளுத்திவிளையாடிய விளையாட்டுப்பிள்ளை என்பது மதுரை அறியாத செய்தியா, என்ன? அப்படிப்பட்ட "வீரம்"கொண்ட சூரப்பிள்ளை ஏற்பாட்டில் தங்கள் கட்சி அலுவலகத்துக்கே "தீ" வைத்து விளையாடி அதையே கேடயமாக வைத்துக்கொண்டு வாக்காளர்களை வாகாய் இழுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற கணக்குப் பொய்க்கும் நாள் தூரத்தில் இல்லை முதல்வர் அவர்களே!
எந்தக் காங்கிரசை வேரடி மண்ணோடு வெறுத்தாரோ அறிஞர் அண்ணா, அந்தக் காங்கிரசுக்கு வெஞ்சாமரம் வீசிக்கொண்டு, அண்ணா உருவாக்கிய திமுகவை "சோனியா திமுகாவா"க்கிய உங்களுக்கு சிந்திக்கும் திறனிழந்துபோய்விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்!
அதுதானே உண்மையும் கூட? இல்லையா முதல்வர் அவர்களே?
ஈழத் தமிழர் அன்றாடச் சாவில் குளிர் காய்ந்து,அந்தக் கதகதப்பில் இன்னும் தம் குடும்பங்களை அரசுக்குள்ளும்,அதிகாரத்துக்குள்ளும் கோடிகளுக்குள்ளும் கொண்டுவரும் ஒரே கனவு நனப்பில் நோட்டுக்களை வீசி ஓட்டுக்களை வாங்கி ஈழத் தமிழர்களுக்கு வேட்டு வைக்கவே சிந்தனையைச் சுழலவிடும் முதல்வர் அவர்களே,
"நாற்பதும் நமக்கே" என்று நீங்கள் கனவு கண்டுகொண்டிருக்கும் நாற்பதிலும் தமிழக மக்கள் திருத்தி எழுதப்போகும் தீர்ப்பைப் பார்க்கத்தானே போகிறீர்கள்!
அடுத்த மடலில் உங்களைச் சந்திக்கும்வரை!
அசாதாரணத் தமிழன்,
- ஆல்பர்ட் பெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா.
Tuesday, April 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment